ஐ.பி.எல். கப் எங்களுக்கு தான்: ஆர்.சி.பி., வீரர் அதிரடி
பெங்களூரு, மார்ச் 30-
டேன் கிறிஸ்டியன் |
‛‛2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பை எங்களுக்கு தான்’’ என அந்த அணியில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., தொடக்கம்
2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி மே 30ல் முடிவடைகிறது. போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஐ.பி.எல். ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
விராட்கோலி, ரோஹித்சர்மா |
ஏப்ரல் 9ந் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட்கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் (ஆர்.சி.பி.) மோதுகின்றன. இரண்டு அணிகளும் பலம்வாய்ந்து இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆர்.சி.பி.யின் பரிதாப நிலை
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களம் காணும் பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. ஏதேனும் ஒரு துறையில் கோட்டை விட்டு விடுகிறது. பேட்ஸ்மென்கள் நன்றாக விளையாடும்போது பவுலர்கள் சொதப்புவதும், பவுலர்கள் திறமையாக செயல்படும்போது பேட்ஸ்மென்கள் குறைந்த ரன்னில் நடையை கட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் ஆர்.சி.பி., அணி பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகும். அதிலும் ரசிகர்கள் ரொம்ப பாவம். பிற அணி ரசிகர்களிடம் மாட்டி கொண்டு பேச முடியாமல் விழி பிதுங்குவதோடு, கேலி, கிண்டலுக்கும் ஆளாவர்கள். இருப்பினும் மனம் தளராத ஆர்.சி.பி. ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும், ‛இ சாலா கப் நம்மதே’ (கன்னட மொழியின் தமிழாக்கம்: இந்த முறை கோப்பை எங்களுக்கு தான்) எனக்கூறி தொடர்ந்து ஆர்.சி.பி. அணிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆர்.சி.பி. ரசிகர்களின் இத்தகைய மனப்பான்மைக்கு ஒரு சலாம் போடலாம்.
கப் எங்களுக்கு தான்
இந்நிலையில் ஆர்.சி.பி.யில் புதிதாக இணைந்துள்ள ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேன் கிறிஸ்டியன், ‛இந்த முறை கப் எங்களுக்கு தான்’ என கூறியுள்ளார்.
டேன் கிறிஸ்டியன் |
சாம்பியன் ஆவோம்
ஆல்ரவுண்டராக பெங்களூரு அணிக்கு நிச்சயம் கைக்கொடுப்பேன். தற்போது பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். பேட்டிங்கின்போது இறுதி கட்டத்தில் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை மைதானத்தை விட்டு விரட்டியடிக்க ஆசைப்படுகிறேன். அத்துடன் கடைசிநேரத்தில் சரியாக பந்துவீச வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்துள்ளேன். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
டிவில்லியர்ஸ், விராட்கோலி |
பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன். மேலும் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லும் அணியில் இணைந்துள்ளார். இவருடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்காக நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது.
மேக்ஸ்வெல் |
விராட்கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோருடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்வது நல்ல சூழலாக அமையும். நிச்சயமாக இந்த முறை நாங்கள் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) கோப்பை வென்று சாம்பியன் ஆவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
யார் இவர்
37 வயதான டேன் கிறிஸ்டியன் 2013ம் ஆண்டில் ஆர்.சி.பி. அணியில் விளையாடினார். இதுதவிர டெக்கான் சார்ஜர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட்ஸ், டெல்லி அணிகளுக்கும் விளையாடி உள்ளார். தற்போது மீண்டும் ஆர்.சி.பி.யில் களம் காண்கிறார். இவர் இதுவரை ஐ.பி.எல்.லில் மொத்தம் 40 போட்டிகளில் பங்கேற்று 446 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக்ரேட் 119.2 ஆக உள்ளது. மேலும் 39 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள நிலையில் எக்னாமி 7.94 ஆக வைத்துள்ளார்.
இதுதவிர ஐ.பி.எல். போன்று பல்வேறு நாடுகளில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதிக அனுபவம் கொண்டுள்ளார். 2020-21ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஸ் கிரிக்கெட் போட்டியில் இவர் அங்கம் வகித்த சிட்னி சிக்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
No comments