டெல்லி கேப்டனாக ரிஷாப் பண்ட்: வெளியான சுவாரசிய தகவல்கள்
புதுடெல்லி, மார்ச் 31-
ரிஷாப் பண்ட் |
ஐ.பி.எல். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணங்களையும், சுவாரசிய தகவல்களையும் அதன் உரிமையாளர் கிரண்குமார் கிராந்தி கூறியுள்ளார். அதுபற்றி இச்செய்தியில் பார்ப்போம்.
புதிய கேப்டன் பண்ட்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்தார். நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.
இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைவரும், உரிமையாளர்களில் ஒருவருமான கிரண்குமார் கிராந்தி சில தகவல்களை கூறியுள்ளார்.
காரணம் என்ன
அவர் கூறியதாவது: ‘‘ஸ்ரேயஸ் அய்யர் கேப்டன்சிப்பில் டெல்லி அணி சிறப்பாக செயல்பட்டது.கடந்த முறை பைனல் வரை முன்னேறியது. துரதிர்ஷ்டவசமாக தற்போது அவர் காயம் அடைந்துள்ளார். விரைவில் அவர் காயத்தில் இருந்து குணமாகி வர வேண்டும்.
இதனால் புதிய கேப்டன் நியமிக்கும் சூழல் உருவானது. அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என ஆலோசித்தோம். சமீபத்திய போட்டிகளில் ரிஷாப் பண்ட் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்து இருந்தது. இதனால் ஒருமனதாக ரிஷாப் பண்ட்டை கேப்டனாக தேர்வு செய்தோம். சிறப்பாக விளையாடி வரும் அவர் தனது திறமைகளை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும். ரிஷாப்பண்ட்டிற்கு வாழ்த்துகள்’’ என்றார்.
No comments