இந்திய அணியில் ‛பவுன்சர் மன்னன்’; அன்றே அடையாளம் கண்டார் கோலி
பிரசித் கிருஷ்ணா |
புனே, மார்ச் 23-
யார்க்கர், பவுன்சர் பந்துகள்
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணியாக இந்தியா விளங்குகிறது. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பேட்ஸ்மென்களை திணறடிக்க பவுலர்களுக்கு இருக்கும் ஆயுதம் என்றால் அது ‛யார்க்கர்’ மற்றும் ‛பவுன்சர்’ பந்துகள் தான். தலைசிறந்த பேட்ஸ்மென்கள் கூட இந்த வகை பந்துகளில் வீழ்ந்து விடுவர். தொடக்கத்தில் ‛பவுன்சர்’, ‛யார்க்கர்’ பந்துகளுக்கு திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் இப்போது அதை சாதுர்யமாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டனர்.
இருப்பினும் இதே ‛யார்க்கர்’, ‛பவுன்சர்’ பந்துகளால் எதிரணியை திணறடிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த பவுலர்கள் இல்லாதது இந்தியாவுக்கு பெரும்குறையாக இருந்தது. ‛யார்க்கர்’ குறையை போக்க பும்ரா, தமிழக புயல் நடராஜன் ஆகியோர் இந்திய அணியில் அங்கம் வகிக்கும் நிலையில் அவ்வப்போது ‛பவுன்சர்’ பந்துகள் வீச இன்னும் அணியில் வீரர் இல்லை என்பது சற்று கவலை தரும் விஷயம்.
குறைய போக்க பிரசித்
தற்போது இக்குறையை தகர்த்தெறியும் ‛பவுன்சர்’ மன்னன் நம் அணிக்கு கிடைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. ஐ.பி.எல்.லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரசித் கிருஷ்ணா தான் அந்த ‛பவுன்சர்’ மன்னன். 25 வயதே ஆன இவர் கொல்கத்தா அணியின் நட்சத்திர பவுலராக ஜொலித்து வருகிறார். இவர் வீசும் ‛பவுன்சர்’ பந்துகளுக்கு ஜாம்பவன் பேட்ஸ்மென்களே திணறுவர்.
தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இன்று துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 18 பேர் கொண்ட இந்திய அணியில் இவரது பெயரும் உள்ளது.
கோலியின் கணிப்பு
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அணியின் மிரட்டல் பவுலராக உருவெடுப்பார் என ஓராண்டுக்கு முன்பே கேப்டன் விராட் கோலி கணித்து சொல்லி இருந்தார்.
பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி |
கடந்தாண்டு ஜனவரியில் இந்தூரில் நடந்த டுவெண்டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி களிப்பில் இருந்த கேப்டன் விராட் கோலியிடம், ‛‛எதிர்வரும் உலககோப்பை டுவெண்டி20 போட்டியில் மிரட்டலான பவுன்சர் பவுலர் இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவை தராதா’’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கோலி, ‛‛அப்படியொரு குறை இந்தியாவுக்கு இருக்காது. ஏனென்றால், எங்களுக்கு உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., போட்டியில் கலக்கிவரும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இருக்கிறார். இவர் தனது பந்தின் வேகத்திலேயே மிரட்டலாக ‛பவுன்சர்’ வீசி பேட்ஸ்மென்களை நிலைகுலைய செய்யும் திறமை பெற்றவர். டுவெண்டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
உலககோப்பையில் வாய்ப்பு உண்டா
தற்போது கோலியின் கணிப்பு உண்மையாகியுள்ளது. டுவெண்டி20 உலககோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா களம் காண்கிறார். உள்ளுர் போட்டியில் கோலியின் ஆசியை பெற்ற இவர் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டுவெண்டி20 உலககோப்பை அணியிலும் அங்கம் வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
#PRASIDHKRISHNA #KARNATAKA #SPECILAPACKAGE #VIRATKOHLI #INDVSENGLAND #BCCI #PUNEMATCH #KOHLIPRAISES #KKR #KOLKATAPLAYERPRASIDH #KARNATAKAPLAYERPRASIDHKRISHNA
No comments