அசுரன்–தனுஷ்க்கு தேசிய விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்
டில்லி, மார்ச் 23–
வெற்றிமாறன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்த தனுஷின் ‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தனுஷ் வென்றார்.
கொரோனாவால் தாமதம்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறந்த படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படும். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் மே 3ம் தேதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் கொரோனா தாண்டவத்தால் கடந்த ஆண்டு விருது அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 67ம் ஆண்டு திரைப்பட தேசிய விருது பெறும் படங்கள், நடிகர், நடிகைகள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. டெல்லி தேசிய ஊடக மையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முழு விவரம் வெளியிடப்பட்டது.
அசுரன் வென்றான்
தமிழக திரைத்துறைக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம், தமிழ் மொழியின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
இது தவிர, இப்படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதன் மூலம் நடிகர் தனுஷ் மீண்டும் தேசிய விருது பெறுகிறார். இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
அசுரன் படம் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ந்தேதி வெளியானது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை கச்சிதமாக படம்பிடித்துக்காட்டியது. படத்தின் காட்சிகள், தனுஷின் பிரம்மாதமான நடிப்பு, வசனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. அசுரனும், தனுசும் திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டினர். அரசியல் தலைவர்கள் கூட இப்படத்தையும் தனுஷ் நடிப்பையும் புகழ்ந்து தள்ளினர்.
விஜய் சேதுபதிக்கு விருது
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமானுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு (படம்: சூப்பர் டீலக்ஸ்), ஸ்பெஷல் ஜூரி விருது, பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ்–7 படத்துக்கு கிடைத்தது.
No comments