தேசிய விருது கொண்டாட்டத்தில் அசுரன் தனுஷ்; ஆசீர்வாதத்தால் சாத்தியமானதாக பெருமிதம்
சென்னை, மார்ச் 24-
‛தேசிய விருது பெற்ற கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் தனுஷ், ஆசீர்வாதத்தால் தான் இவ்விருது சாத்தியமானதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் |
இந்திய சினிமாவுக்கான 67ம் ஆண்டு தேசிய விருது பட்டியல் வெளியானது. தமிழ் திரைத்துறைக்கும் 8 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‛அசுரன்’ படம், தமிழ் மொழியின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. அதில் நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனுஷ் 2வது முறையாக தேசியவிருது பெறுகிறார். முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளியான ‛ஆடுகளம்’ படத்துக்கு தேசியவிருதும், சிறந்த நடிப்புக்காக தனுசுக்கு தேசியவிருதும் கிடைத்துள்ளது.
அறிக்கை
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் தனுஷ், தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கனவு
‛அசுரன்’ படத்துக்கு பெருமைமிகு தேசிய விருது கிடைத்திருக்கும் செய்தி கேட்டே மகிழ்ச்சியுடன் காலையில் எழுந்தேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஒன்றையாவது பெறவேண்டும் என்பது கனவு.
தற்போது 2வது முறையாக தேசிய விருது பெறுவது என்பது ஆசீர்வாதம் தான். இதை நான் ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை.
கதை கேட்க ஆவல்
நான் நிறைய பேருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வழக்கம்போல் எனது அம்மா, அப்பா, எனது குருவான என் அண்ணா ஆகியோருக்கு முதலில் நன்றி.
சிவசாமி கதாபாத்திரம் கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. பாலுமகேந்திரா சார் அலுவலகத்தில் முதல் முறையாக சந்தித்தபோது இருவரும் நல்ல நண்பர்கள், சகோதரர்களாக மாறுவோம் என்பதை நான் நினைக்கவில்லை வெற்றி.
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் |
உங்களுடன் பணியாற்றிய 4 படங்கள், தயாரித்த 2 படங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். என்மீது உங்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கையு, உங்கள் மீதான என் நம்பிக்கையும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக நீங்கள் எழுதி வைத்திருக்கும் அடுத்த கதை பற்றி கேட்க ஆவலாக இருக்கிறேன்.
ரசிகர்களுக்கு நன்றி
தேசிய விருது குழுவினருக்கும், தயாரிப்பாளர் தானு சாருக்கும் நன்றி. அசுரன் படக்குழு, குறிப்பாக எனது குடும்பமான பச்சையம்மா மஞ்சு, சிதம்பரம் கென், என்னுடைய முருகன் தீசே ஆகியோருக்கும் நன்றி. வா... அசுராவுக்காக ஜி.வி.க்கு நன்றி. என்னை வாழ்த்திய திரைப்பட துறையினருக்கும் நன்றி.
இறுதியாக எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தும் எனது பலத்தின் துாணாக இருக்கும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. உங்கள் மீது எப்போதும் எனக்கு அன்பு உண்டு. அன்பை மட்டுமே பரப்புவோம்.
எண்ணம் போல் வாழ்க்கை! என்றென்றும் அன்புடன் தனுஷ்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய செய்திக்கு....
https://www.newsthendral.com/2021/03/howtogeta-nationalawardfordhanushexplainedkangaiamaran.html
No comments