Header Ads

Header ADS

ஐ.பி.எல்.கோப்பை வென்றால் இதுதான் நடக்கும்; டிவிலியர்ஸ் ‛பளீச்’ பேட்டி

சென்னை, ஏப்.19-

‛‛ஐ.பி.எல். கோப்பையை வென்றால் மயங்கி விழுந்துவிடுவேன்’’ என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி வீரர் டிவிலியர்ஸ் கூறினார்.

பெங்களூரு அபாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 14வது சீசன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் கோப்பை வெல்லும் முனைப்பில் களம் காணும் பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. கோப்பை வெல்லும் கனவு ஆண்டுதோறும் கானல் நீராகவே மாறி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டும் கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், 3வது போட்டியில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியையும் வீழ்த்தி ‛ஹாட்ரிக்’ வெற்றியுடன் வீறுநடை போடும் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பேட்டிங், பவுலிங் பலம்

இந்த சீசனில் பெங்களூரு அணிக்கு பவுலர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். சகால் தவிர அனைவரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் முழுதிறமையையும் வெளிப்படுத்தி எதிரணி பேட்ஸ்மென்களை திணறடிக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அதிரடி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ், புதுவரவு மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

மும்பைக்கு எதிரான போட்டியில் டிவிலியர்ஸ் 48 ரன், மேக்ஸ்வெல் 39 ரன், கோலி 33 ரன்கள் குவித்தனர். ஹர்ஷல் பட்டேல் 27 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஐ தராபாத்துக்கு எதிரான 2வது போட்டியில் மேக்ஸ்வெல் 59 ரன், கோலி 33 ரன்கள் கவிக்க சபாஸ் அகமது 2 ஓவரில் 7 ரன்கள்  விட்டு கொடுத்து 3 விக்கெட்டும், சிராஜ், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களும், டிவிலியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களும் விளாச அணி 204 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் கைல் ஜேமிசன் 3 விக்கெட், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி பெங்களூருவுக்கு வெற்றி தேடி தந்தனர்.

டிவிலியர்ஸ் கருத்து

நடப்பு சீசனை பெங்களூரு அணி சிறப்பாக தொடங்கி உள்ளது. இதேநிலை தொடரும் பட்சத்தில் முதல் முறையாக பெங்களூரு ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்.
இந்நிலையில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றால் என்ன நடக்கும் என்பது பற்றி அந்த அணிக்காக 2011 முதல் விளையாடி வரும் அதிரடி வீரர் டிவிலியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மயங்கி விழுந்துவிடுவேன்

நான் பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல விரும்புகிறேன். கோப்பையை வெல்லும் அந்த நாளில் எந்த மனநிலையில் இருப்பேன் என என்னால் விவரிக்க முடியவில்லை. நீண்டநாள் கனவு நிறைவேறியதால் உற்சாக மிகுதியால் குதிப்பேன் அல்லது மயங்கி விழுந்தாலும் விழுந்து விடுவேன். இதுபற்றி பேசினால் உங்களுக்கு போர் அடித்துவிடும்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் நிமிடத்தில் எப்படி உணர்வோம் என்பது பற்றி ேஷன் வாட்சனிடம் பேசியுள்ளேன். அதாவது சீசனில் நடந்த நல்ல விஷயங்கள், உரையாடல்கள், புரிதல்கள், வியூகங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் நினைவுக்கு வரலாம். ஐ.பி.எல். கோப்பையை விட இதுதான் மிகசிறந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகில் நடக்கும் மிகப்பெரிய தொடர்களில் ஐ.பி.எல்., ஒன்றாகும். இத்தொடரில் எந்த சூழலிலும் அணியுடனான பிணைப்பு அவசியமானது. கோப்பை வெல்வதை விட நல்ல நண்பர்களை உருவாக்கி கொள்வது முக்கியமானது. ஆனாலும் பொய் சொல்லக்கூடாது. நாங்கள் ஐ.பி.எல். கோப்பை வெல்ல விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.