‛தல’ டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்; முதல் போட்டியிலேவா இப்படி நடக்கனும்
மும்பை, ஏப். 11-
மும்பையில் நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசியதற்காக சென்னை கேப்டன் ‛தல’ டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை-டெல்லி மோதல்
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று சென்னை-டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 188 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் குவித்தார்.
டெல்லி அணி 18.4 ஓவரில் இந்த இலக்கை எட்டி பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான தவான் 85 ரன்களும், பிரித்வி ஷா 71 ரன்களும் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுத்தனர்.
டோனிக்கு அபராதம்
இந்நிலையில் போட்டியில் சென்னை அணி மெதுவாக பந்துவீசியது தெரியவந்துள்ளது. அதாவது ஐ.பி.எல். 2021 நடத்தை விதிகள் படி 90 நிமிடங்களில் 20 ஓவர் வீசப்பட வேண்டும். குறிப்பாக ஒரு மணிநேரத்தில் 14.1 ஓவர்கள் முடித்திருக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணி காலதாமதமாக பந்து வீசியது.
இதன் மூலம் சென்னை கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையும் இதே தவறு ஏற்படும்போது அபராதமாக ரூ.24 லட்சமும், 3வது முறை நடந்தால் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு போட்டியில் பங்கேற்ற தடையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments