டோனியிடம் கற்றுக்கொண்டாலும் கேப்டனாக பதற்றமடைந்தேன்; ரிஷாப் பண்ட் விளக்கம்
மும்பை, ஏப்.11-
‛‛டோனியிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டாலும் டெல்லி அணியை வழிநடத்தியபோது கேப்டனாக பதற்றமடைந்தேன்’’ என ரிஷாப் பண்ட் கூறினார்.
கேப்டன் ரிஷாப் பண்ட்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று தல டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், இளம் அதிரடி வீரர் ரிஷாப் பண்ட் வழிநடத்தும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் நேற்று மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்.லில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்று டெல்லி அணியை வழிநடத்திய ரிஷாப் பண்ட்டிற்கு இது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கேப்டனாக செயல்பட்டது குறித்து ரிஷாப் பண்ட் மனம் திறந்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பதற்றமடைந்தேன்
ஐ.பி.எல்.லில் முதல் முறையாக கேப்டனாகி அணியை வழிநடத்தினேன். கேப்டனாக செயல்பட்ட அனுபவம் நன்றாக உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அனைத்தும் நல்லதாகவே முடிந்தது. போட்டியின் நடுவில் சி.எஸ்.கே., வீரர்கள் நன்றாக விளையாடினர். இது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவேஸ் கான், டாம் கரண் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்வீழ்த்தினர். இதனால் தான் சி.எஸ்.கே.,வை 188 ரன்னில் கட்டுப்படுத்த முடிந்தது.
முன்னதாக அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ரபாடா, நோர்ட்ஜே விளையாட முடியாத நிலையில் இருக்கும் மற்ற வீரர்களை கொண்டு சிறப்பான அணியை உருவாக்க திட்டமிட்டோம். எங்களது தேர்வு போட்டியில் கைக்கொடுத்துள்ளது. பிரித்வி ஷா, தவான் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். குறிப்பாக பவர்பிளேயில் அவர்கள் அற்புறதமாக விளையாடினர். இருவரும் எளிமையான முறையில் சிறப்பான ஷாட்களை அடித்தனர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது.
டோனியிடம் கற்றுள்ளேன்
டோனியுடன் டாஸ் பகிர்ந்து கொண்டது மறக்கமுடியாத தருணம். ஒரு அணியின் கேப்டனாக அவருடன் சேர்ந்து மைதானத்தில் நடந்தது நல்ல உணர்வாக அமைந்தது.
டோனியிடம் இருந்து எப்போதும் நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். எனக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் நான் நாடும் முதல் நபர் அவராக தான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments