பெங்களூருவை பதம் பார்த்த சென்னை; நடப்பு சீசனில் கோலி அணிக்கு முதல் தோல்வி
மும்பை, ஏப்.25-
ஐ.பி.எல்.லில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்கடித்தது. இதன்மூலம் நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை அணி தடைப்போட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
சென்னை ரன்குவிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ‛தல’ டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ‛ரன்மெஷின்’ விராட் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி. மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடந்தது.
முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. தொடக்கஜோடியான டூபிளசிஸ், கெய்க்வாட் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.
ஜடேஜா அசத்தல்
டூபிளசிஸ் 50 ரன் (41 பந்து). கெய்க்வாட் 33 ரன்(25 பந்து) அடித்து அவுட்டாகினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜடேஜா 62 ரன்கள்(28 பந்து) குவித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 20வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 5 சிக்சர்களுடன் மொத்தம் 37 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.
பெங்களூரு அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய ஹர்ஷல் படேல் 51 ரன்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சகால் ஒரு விக்கெட் எடுத்தார்.
பெங்களூரு தோல்வி
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. விராட்கோலி 8 ரன்னுக்கு அவுட்டானார். படிக்கல் 34, வாஷிங்டன் சுந்தர் 7, மேக்ஸ்வெல் 22, டிவிலியர்ஸ் 4 ரன் என முன்னணி வீரர்கள் விரைவிலேயே நடையை கட்டினர்.
இறுதியில் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட், இம்ரான் தாஹீர் 2, ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கரண் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
சென்னை முதலிடம்
இதன்மூலம் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகள் கண்ட பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி கிடைத்தது. அந்த அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை முட்டுக்கட்டை போட்டது. அத்துடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் (8) முதல் இடத்துக்கு சென்னை முன்னேறியது. பெங்களூரு 8 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
No comments