Header Ads

Header ADS

ஒரு சிக்சுக்கு 12 ரன் கொடுங்க; 20 ஓவர் போட்டியை விறுவிறுப்பாக்க பீட்டர்சன் ‛ஐடியா’

மும்பை, ஏப்.28-

20 ஓவர் போட்டிகளில் 100 மீட்டருக்கும் அதிக தூரத்துக்கு சிக்ஸ் அடித்தால் அதற்கு 12 ரன்கள் வழங்கும் வகையில் புதிய விதிமுறையை கொண்டு வர வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன். இவர் ஐ.பி.எல்.லில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்காக விளையாடினார். தற்போது அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

தற்போது பீட்டர்சன் வர்ணனையாளராக உள்ளார்.  சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கிரிக்கெட் தொடர்பாக தனது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

12 ரன்கள் வழங்குங்க

இந்நிலையில் 20 ஓவர் போட்டியில் அதிக துாரத்துக்கு சிக்ஸ் அடுத்தால் அதற்கு 12 ரன்கள் வழங்க வேண்டும் என ஐ.சி.சி.யிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

‛‘20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறையை புகுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது 100 மீட்டருக்கும் அதிக தூரத்துக்கு சிக்ஸ் அடித்தால் வழக்கமாக வழங்கும் 6 ரன்களுக்கு பதில் 12 ரன்கள் வழங்க வேண்டும். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அல்லது ஐ.சி.சி., அமல்படுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

ஆதரவும், எதிர்ப்பும்

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர், ‘‘இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் 20ஓவர் போட்டி இன்னும் விறுவிறுப்பாக செல்லும்’’ என்கின்றனர்.

அதேநேரத்தில், எதிர்ப்பாளர்களின் பார்வை வேறு விதமாக உள்ளது. அவர்களது பதிவில், ‘‘இது பவுலர்களுக்கு விரோதமான விதி. மேலும் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் போட்டியாக 20ஓவர் கிரிக்கெட் மாறிவிடும். ஒருவேளை இந்த விதியை புகுத்த விரும்பினால் இன்னொன்றையும் செய்ய வேண்டும். ஸ்டம்புகள் சிதற பேட்ஸ்மேன்களை பவுலர்கள் விக்கெட் எடுத்தால் 2 விக்கெட் வீழ்ந்ததாக அறிவிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் குறிப்பிட்ட ரன்களை கழிக்க வேண்டும்’’  என்ற கருத்துகளை பிரதிபலிக்கின்றன. 

No comments

Powered by Blogger.