டெல்லியில் எப்படி விளையாட போகிறார்களோ; ஐ.பி.எல். அணி குறித்து லாரா கவலை
புதுடெல்லி, ஏப். 29-
மும்பை 2 வெற்றி
ஐ.பி.எல்.லில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2021ல் கோப்பை வெல்லும் பட்சத்தில் ஹாட்ரிக் சாதனை படைக்கும்.
இந்நிலையில் நடப்பு சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு மும்பை அணியின் செயல்பாடு இல்லை. இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய மும்பை 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
டெல்லியில் இன்று மோதல்
மும்பை அணியின் இந்த சரிவுக்கு முதல் 5 போட்டிகளும் சென்னை மைதானத்தில் நடந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. மெதுவான மற்றும் சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்களால் ரன்குவிக்க முடியவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
ஒருவழியாக சென்னை மைதான போட்டிகளை முடித்து மும்பை இந்தியன்ஸ் டெல்லி சென்றுள்ளது. இங்கு 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றிபாதைக்கு திரும்ப மும்பை அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும் மும்பை அணி வீரர்கள் முன்பு பெரும் சவால் உள்ளது. டெல்லி மைதானமும் மெதுவான மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும். அதேநேரத்தில் சென்னையை ஒப்பிடும்போது கொஞ்சம் ரன்குவிப்புக்கு கைக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
லாரா கவலை
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலை கவலையளிப்பதாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
ஆடுகளத்துக்கு ஏற்ப மாற்றம்
மும்பைக்கு இந்த சீசன் மிகவும் கடினமாக இருப்பதாக கருதுகிறேன். ஒவ்வொரு அணியும் புதிய இடத்தில் விளையாடும்போது தன்னம்பிக்கையுடன் களம் கண்டு வெற்றி பெற வேண்டும். இதை பெங்களூரு உள்ளிட்ட வெற்றி பெறும் அணி செய்கிறது. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் விளையாடும் மைதானம் குறையாக பார்க்கப்படும். மைதானத்தை தான் குறைகூறுவார்கள்.
தொடர்ந்து இருமுறை சாம்பியனான மும்பை அணியின் ஆட்டம் தற்போது கவலையளிக்கிறது. தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்று விளையாட உள்ளனர். அதுவும் மெதுவான ஆடுகளம் தான். இங்கு எப்படி விளையாட போகிறார்களோ?. மும்பை அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியமானதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments