Header Ads

Header ADS

பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சம் நிதி; ஆக்சிஜன் தேவைக்காக பிரதமர் நிவாரண தொகையாக வழங்கினார்

அமதாபாத், ஏப்.26-

இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவும் நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக கொல்கத்தா வீரர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார். மேலும் ஐ.பி.எல்.லில் விளையாடும் வீரர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா 2ம் அலை

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாகி உள்ளது. ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை தாண்டும் நிலையில் தினமும் பலியாவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடக்கிறது.

மேலும் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கி இந்தியாவுக்கு உதவ உலகநாடுகள் முன்வந்துள்ளன.

கம்மின்ஸ் ரூ.37 லட்சம் நிதி

இந்நிலையில் ஐ.பி.எல்.லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். இதை ஆக்சிஜன் வாங்குவதற்காக செலவிடும்படி கூறியுள்ளார். மேலும் ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் வீரர்களும் உதவி செய்யும்படி வலியுறுத்தி உள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

ஆழ்ந்த வருத்தமளிக்கிறது

நான் பல ஆண்டுகளாக நேசித்த நாடு இந்தியா. இங்குள்ள மக்கள் அன்பானவர்கள், கனிவானவர்கள். கொரோனா பாதிப்பால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு துன்பம் அனுபவிப்பது எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது பொருத்தமானது தானா என்ற விவாதங்களும் எழுந்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐ.பி.எல். போட்டி நடக்கும் சிலமணி நேரங்கள் மக்கள் வீட்டுக்குள்ளே இருந்து ரசித்து மகிழ்கிறார்கள் என்பதைஇந்திய அரசுக்கு கூற விரும்புகிறேன்.

50 ஆயிரம் டாலர்

லட்சக்கணக்கான மக்களுக்கு நல்லவிதமாக பயன்பட வேண்டும் என்பதற்காக வீரர்களாகிய எங்களுக்கு சிறப்புரிமை வழங்கி அதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்து நான் பிரதமர் நிவாரண நிதிக்கு (பி.எம். கேர்ஸ்) பங்களிப்பு செய்கிறேன்.

ஐ.பி.எல்.லில் விளையாடும் பிற வீரர்களும், உலகின் பிற பகுதிகளில் இருந்துகொண்டு இந்தியாவை நேசிப்போரும் பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். இதன் தொடக்கமாக ஆக்சிஜன் வாங்குவதற்காக நான் 50 ஆயிரம் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பெரியதொகை இல்லை என்பதை நான் உணர்வேன். இருப்பினும்  ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை

நிதியுதவி செய்த பாட் கம்மின்சை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்களால் முடிந்தஅளவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.