‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா பழைய ஷூ அணிந்தது ஏன்... இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா...
சென்னை, ஏப். 11-
பழைய ஷூவில் ரோகித்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்–பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடைசி பந்தில் வென்றது.
முன்னதாக பேட்டிங் செய்ய வந்தபோது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பழைய ஷூ அணிந்திருந்தார். அந்த ஷூவை அவர் எதற்காக அணிந்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரணம் என்ன
அதாவது ரோகித் அணிந்திருந்த ஷூவில் ‘சேவ் தி ரினோ’ என சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் அழிந்து வரும் காண்டாமிருகத்தை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதை ரோகித் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றிய ரோகித்தின் டுவிட்டர் பதிவு:
நான் மைதானத்தில் இறங்கியபோது வெறும் விளையாட்டை தாண்டி வேறு ஒன்றையும் உணர்ந்தேன். கிரிக்கெட் விளையாடுவது என்பது என் கனவு. அதே நேரத்தில் இந்த உலகத்தை அனைத்து உயிர்களுக்கான அருமையான இடமாக மாற்ற ஒவ்வொருவரும் பணி செய்ய வேண்டும் என்பது தேவையானதாக உள்ளது.
நான் விரும்பி களத்தில் செய்யும் செயலோடு என் இதயத்துக்கு நெருக்கமான ஒரு காரணத்தை எடுத்து வலியுறுத்துவது தனிச்சிறப்பு, என குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டுகள்
இவ்வாறாக ரோகித் ஷர்மா காண்டாமிருகத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், அமிதாப்பச்சனின் மகன் உள்பட பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ரோகித் ஷர்மா கடந்த 2018 ம் ஆண்டு ‛டபிள்யூடபிள்யூஎப்’ எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் இந்திய காண்டாமிருக பாதுகாப்பு துாதராக நியமிக்கப்பட்டார். இந்த நிதியம் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுடன் சேர்ந்து உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என அவ்வப்போது அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments