Header Ads

Header ADS

கொல்கத்தாவின் ரகசிய குறியீடு; மார்கனுக்கு மரியாதை இருக்கா; சேவாக் சந்தேகம்

 

ஆமதாபாத், ஏப்.28-

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியினர் ரகசிய குறியீடு பயன்படுத்திய நிலையில் அந்த அணியின் கேப்டன் மார்கனுக்கு மரியாதை இருக்கிறதா என சேவாக் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்தில் உள்ள ஆமதாபாத்  மோடி மைதானத்தில் ராகுல் தலைமையிலான பஞ்சாப், இயான் மார்கனின் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 123 ரன்கள் மட்டும் சேர்த்தது.

அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடக்கத்தில் தடுமாறிய கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் தற்போது சிறப்பாக செயல்பட்டார். அவர் 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.

விவாத பொருளான 54

முன்னதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கொல்கத்தா கேப்டன் இயான்மார்கனுக்கு களத்துக்கு வெளியே இருந்த பயிற்சியாளர்கள் சில அறிவுரைகளை வழங்கினர். குறிப்பாக 54 என்ற எண்ணை குறியீடாக காண்பித்தது பெரும் விவாதப்பொருளானது.

இதுபற்றி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மரியாதை இருக்கிறதா

ரகசிய குறியீடு ராணுவத்தில் பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். 54 என்ற எண் அவர்களது திட்டத்தின் பெயரை குறிக்கும் குறியீடாக இருக்கலாம். குறிப்பிட்ட பவுலரை அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்த களத்துக்கு வெளியே இருந்து பயிற்சியாளர் காட்டி இருக்கலாம்.
பெவிலியன் பகுதியில் இருந்து அணி நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர் சிறுசிறு உதவிகளை கேப்டனுக்கு வழங்கலாம். ஆனால் அங்கிருந்த படியே ஆலோசனை என்ற பெயரில்  போட்டியை கட்டுப்படுத்தினால் சரியாக இருக்காது. அப்படி நடந்தால் யார் வேண்டுமானாலும் கேப்டனாக செயல்படலாம். அதேநேரத்தில் கேப்டனாக இருக்கும் இயான் மார்கனுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.  மேலும் உலககோப்பையை வெல்ல பயன்படுத்திய நுட்பமான திறனை கேப்டன் என்ற முறையில் போட்டியில் செயல்படுத்த இயான்மார்கனுக்கு எந்த பங்கும் இருக்காது.

தவறு இல்லை

அதேநேரத்தில் வெளியில் இருந்து அறிவுரைகளை கேட்கக்கூடாது என ஒருபோதும் நான் கூறமாட்டேன். ஏனென்றால் 25வது வீரர் கூட நல்ல யோசனையை வழங்கலாம்.

தற்போதைய நிகழ்வில்  கேப்டனாக மார்கன் ஏதேனும் ஒரு வியூகத்தை களத்தில் செயல்படுத்த மறந்து இருக்கலாம். அதை ஞாபகப்படுத்தும் வகையில் குறியீடு காட்டப்பட்டு இருந்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.