விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்; டோனி, ரோகித்துடன் இணைந்த சோகம்
மும்பை, ஏப்.25-
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் டோனி, ரோகித்துடன் அபராத பட்டியலில் இணைந்துள்ளார்.
சென்னை வெற்றி
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ‛தல’ டோனி தலைமையிலான சென்னை அணியும், விராட் கோலி வழிநடத்தும் பெங்களூரு அணியும் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணி 191 ரன்கள் குவித்தது. இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலிக்கு அபராதம்
இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பெங்களூரு அணி பந்துவீசவில்லை. இதனால் ஐ.பி.எல். விதிமுறைப்படி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
பெங்களூரு அணி மீண்டும் இத்தவறை செய்தால் கேப்டன் என்ற முறையில் விராட் கோலிக்கு ரூ.24 லட்சமும், அணி வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அது அபராதமாக பிடிக்கப்படும். 3வது முறையும் தவறு நிகழ்ந்தால் விராட்கோலிக்கு ரூ.30 லட்சத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.12 லட்சம் இதில் எது குறைவோ அது அபராதமாக வசூலிக்கப்படும்.
டோனி, ரோகித்துடன் கோலி
நடப்பு சீசனில் இதற்கு முன்பு மெதுவாக பந்துவீசியதாக சென்னை கேப்டன் டோனி, மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே தலா ரூ.12 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளனர்.
தற்போது விராட்கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரும் டோனி, ரோகித்துடன் அபராதம் செலுத்தியோர் பட்டியலில் இணைகிறார்.
No comments