கொரோனா பரவும் வேகம் வருத்தமளிக்கிறது; மத்திய சுகாதார செயலாளர் சொல்வதென்ன
ராஜேஷ் பூஷன் |
புதுடெல்லி, ஏப்.14-
கொரோனா இரண்டாம் அலை
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 3 நாட்களாக சராசரியாக 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. இதனால் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திவிட்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பேட்டி
உண்மையில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு .உள்ளதா, கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89.51 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர். 1.25 சதவீதம் பேர் துரதிர்ஷ்டவசமாக பலியாகி உள்ளனர். 9.24 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வருத்தமளிக்கும் விஷயம்
நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு முந்தைய நாட்களை விட தினம் தினம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 94,372 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்து 61 ஆயிரத்து 736 ஆக உள்ளது. கொரோனா பரவல் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மராட்டியம், சத்தீஸ்கர், உத்தரபிரதேச மாநிலங்களில் பாதிப்பு அதிவேகமாக உயர்வது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
நோய் பரவல் அதிகமுள்ள இடங்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள 53 மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்துள்ள 53 மாவட்டங்களில் கலெக்டர், சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து தடுப்பு பணி செய்கிறார்கள். இதனால் அனைவரும் கொரோனா தடுப்பில் கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை
கடந்த 24 மணிநேரத்தில் 40 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. காலை 11 மணி(நேற்று) நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் தடுப்பூசி இருப்பு 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 960 ஆக அதிகரிக்கப்படும்.
இதன்மூலம் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை மொத்தம் 13 கோடியே 10 லட்சத்து 90 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி உள்ளோம். இதில் கேரளாவில் தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை. இருப்பினும் பிற மாநிலங்களில் 8–9 சதவீத தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments