Header Ads

Header ADS

நோயாளியின் ஆக்சிஜன் கருவியை தூக்கி சென்ற சென்னை அணியினர்; என்ன நடந்தது தெரியுமா


புதுடெல்லி, ஏப்.30-

டெல்லி விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஆக்சிஜன் கருவியை தூக்கி சென்றதால் நோயாளிக்கு மருத்துவமனையில் படுக்கை கிடப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடுகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் பலியாகி வருகிறார்கள்.

டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் நோயாளியின் சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தூக்கி சென்ற சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

மூச்சுத்திணறிய தந்தை

அன்வர் என்பவரின் தந்தை டெல்லியில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் தந்தையை காப்பாற்ற, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை(கான்சன்டிரேட்டர்) அன்வர் பெங்களூருவில் வாங்கினார்.

கான்சன்டிரேட்டர் கருவி

இக்கருவி பேட்டரி உதவியுடன் இயங்கி காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து சுவாசிக்க ஏதுவாக நோயாளிக்கு வழங்கும். இந்த கருவியை அட்டைப்பெட்டியில் வைத்துகொண்டு ஏப்., 26ல் இண்டிகோ விமானத்தில் அன்வர் பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றார்.

கருவி மாயம்

விமான நிலையத்தில் சோதனைக்காக பொருட்களை சுமந்து செல்லும் பெல்ட்டில் கருவி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் கருவி அவருக்கு கிடைக்கவில்லை.

இதுபற்றி அவர் விமான நிலைய ஊழியர்களிடம் கேட்டார். அவர்கள் காத்திருக்கும்படி கூறியதோடு, சரக்குகள் கையாளும் பகுதியில் பார்த்து சொல்வதாக தெரிவித்தனர். 24 மணிநேரமாகியும் கான்சன்டிரேட்டர் கருவி கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாயமான கருவி பற்றிய ஒரு செய்தி படத்துடன் அன்வருக்கு கிடைத்தது.  கான்சன்டிரேட்டர் கருவி சென்னை அணியினரின் உடைமைகளுடன் எடுத்து செல்லப்பட்டதாக சொல்லப்பட்டது.

தூக்கி சென்ற சென்னை அணி

அதாவது ஐ.பி.எல். போட்டிக்காக அன்வர் பயணம் செய்த ஏப்.,26ல் மும்பையில் இருந்து சென்னை அணியினர் விமானத்தில் டெல்லி சென்றனர். விமான நிலைய பெல்ட்டில் அட்டைப்பெட்டியில் இருந்த கான்சன்டிரேட்டரை தங்களது உடைமை என நினைத்து சென்னை அணியினர் துாக்கி சென்றனர்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீரர்களின் தனிப்பட்ட பொருட்களை தவிர அனைத்து பொருட்களும் ஓட்டல் அறைக்கு எடுத்து செல்லப்பட்டு சானிடைசர் தெளிக்கப்பட்டு ஒருநாள் முழுதும் அப்படியே வைக்கப்பட்டது.

36 மணிநேரத்துக்கு பின் ஒப்படைப்பு

அதன்பின் ஏப்.27 இரவில் ஓட்டல் அறை பொருட்களை பார்த்தபோது கான்சன்டிரேட்டர் அட்டைபெட்டியில் இருப்பதை அறிந்து விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் விமான ஊழியர் மூலம் கான்சன்டிரேட்டர் கருவி அன்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாயமான கான்சன்டிரேட்டர் 36 மணிநேரம் கழித்து அவருக்கு கிடைத்தது.

படுக்கையின்றி சிரமம்

இருப்பினும் அந்த கருவி இல்லாததால் தந்தைக்கு மருத்துவமைனயில் படுக்கை கிடைக்காமல் அன்வர் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.