Header Ads

Header ADS

நாடு திரும்ப தனிவிமானம் வேண்டும்; கொரோனா பரவலால் மும்பை வீரர் அடம்

 

டெல்லி, ஏப்.28-

கொரேனா பரவல் காரணமாக ஐ.பி.எல். முடிந்த பிறகு நாடு திரும்ப வசதியாக எங்களுக்கு தனிவிமானம் வேண்டும் என மும்பை வீரர் கிறிஸ்லின்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல்

14வது ஐ.பி.எல். சீசன் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 3.50 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மேலும் வீரர்களும் கொரோனா கண்காணிப்பு வளையத்தில் இருந்தபடி விளையாடி வருகிறார்கள்.

நாடு திரும்பும் வீரர்கள்

இருப்பினும் கொரோனா நோய் அச்சம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை(ராஜஸ்தான்) சொந்தநாடு திரும்பினார்.

இந்தியாவின் அஸ்வின்(டெல்லி), ஆடம் ஜம்பா (பெங்களூரு), ரிச்சட்சன் (பெங்களூரு) ஆகியோரும் நடப்பு சீசனில் விலகியுள்ளனர். ஜம்பா, ரிச்சட்சன் ஆகியோர் தாயகம் புறப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கான விமானங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. இதுதான் ஆன்ட்ரூ டை, ஜம்பா, ரிச்சட்சன் ஆகியோர் உடனடியாக நாடு திரும்புவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

தொடரும் முன்னணி வீரர்கள்

இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ் (டெல்லி), டேவிட் வார்னர்(ஐதராபாத்), பாட் கம்மின்ஸ்(கொல்கத்தா), நாதன் கவுல்டர் நீல், கிறிஸ்லின் (மும்பை), மேக்ஸ்வெல் (பெங்களூரு), பெஹன்ட்ரூப் (சென்னை) போன்ற முன்னணி வீரர்களும், பயிற்சியாளர்களாக உள்ள ரிக்கிபாண்டிங், ஹசி சகோதரர்கள், சைமன் காடிச் உள்ளிட்ட மேலும் சிலரும் ஐ.பி.எல்.லில் தொடர்கிறார்கள்.

இவர்களின் உடல்நலம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவ்வப்போது கேட்டு அறிந்து வருகிறது. மேலும் நாடு திரும்பும் திட்டம் பற்றியும் இவர்களிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்., முழு தொடரிலும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தனிவிமானம் வேண்டும்

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால்  தற்போது வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினாலும் அவர்களால் ஆஸ்திரேலியா செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

இந்நிலையில் தான்  ஐ.பி.எல். வீரர்கள் தொடர் முடிந்து நாடு திரும்ப தனிவிமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிறிஸ்லின் (மும்பை) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்குள் கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

அரசை நம்புகிறோம்

ஐ.பி.எல். ஒவ்வொரு ஒப்பந்தத்தின்போதும் 10 சதவீத தொகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைக்கிறது. இந்த தொகையை நடப்பு ஆண்டில் ஐ.பி.எல். முடித்து வீரர்கள் நாடு திரும்ப ஏதுவாக தனிவிமானத்துக்கு செலவிட வேண்டும்.

இந்தியாவில் நாங்கள் கொரோனா கண்காணிப்பு வளையத்தில் இருந்து விளையாடி வருகிறோம். அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியும் செலுத்தி கொள்ள இருக்கிறோம். அதனால் ஆஸ்திரேலிய அரசு தனிவிமானத்தை அனுமதிக்கும் என நம்புகிறோம். நோயின் தீவிரத்தன்மை பற்றி அறிந்ததால் குறுக்குவழியில் நாடு திரும்ப விரும்பவில்லை. எங்களை விட பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.