நான் மட்டும் கோலியா இருந்தா இவர்களை தான் அணியில் சேர்ப்பேன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் சொல்வதென்ன
பனேசர் |
புதுடெல்லி, ஏப்.13-
‛‛நான் மட்டும் விராட்கோலியா இருந்தா நடைபெற உள்ள 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் சகால், குல்தீப்பிற்கு பதில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்வேன்’’ என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறினார்.
எடுபடாத சுழற்பந்து வீச்சு
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தமட்டில் பேட்ஸ்மென்கள், ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் 50 மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சமீபகாலமாக சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை.
வாய்ப்பு கிடைத்தும் சகால் சரியாக செயல்படவில்லை. கடைசியாக விளையாடிய பத்து 20 போட்டிகளில் வெறும் 9 விக்கெட்டுகள் மட்டுமே அவர் கைப்பற்றியுள்ளார். குல்தீப் யாதவிற்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019, 2020 ம் ஆண்டுகளில் வெறும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இதற்கு சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை சான்றாக கூறலாம். இந்த தொடரில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு கொஞ்சம் கூட கைக்கொடுக்கவில்லை.
அடையாளம் காண்பது அவசியம்
இந்நிலையில் தான் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 20 ஓவர் உலககோப்பை போட்டி நடக்கவுள்ளது. இதனால் இந்தியாவுக்கான சுழற்பந்து வீச்சை பலப்படுத்துவது அல்லது மாற்று சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியமானதாக உள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு
20 ஓவர் உலககோப்பை நெருங்கும் நிலையில் இந்திய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கடமை கேப்டன் விராட் கோலிக்கு உள்ளது. அது யாராக இருப்பார்கள் என்பது விராட் கோலிக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஏனென்றால் அவர் நன்றாக விளையாடும் வீரரை தான் அணியில் சேர்ப்பார்.
என்னை பொறுத்தமட்டில் சகால், குல்தீப் யாதவ் ஆகியோரை விட்டுவிட்டு அனுபவ வீரர்களான அஸ்வின், ஜடேஜாவை அணியில் சேர்க்க பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோலி முன்வர வேண்டும்.
அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அனுபவ வீரர்கள் மட்டுமின்றி பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டவர்கள். மைதானத்தை நன்றாக கணிக்கும் திறன் கொண்டுள்ளனர். இருவரும் நிச்சயம் தாங்கள் விளையாடும் அணிக்கு வெற்றியை தேடி தரும் திறமைப்படைத்தவர்கள். நான் மட்டும் விராட் கோலியாக இருந்தால் நிச்சயமாக அஸ்வின், ஜடேஜாவை தான் 20 ஓவர் உலககோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்வேன்.
மேலும் ஐ.பி.எல்.லில் திறமையை நிரூபிக்கும்பட்சத்தில் ஹர்பஜன் சிங்கை கூட அணியில் இணைக்க பரிசீலனை செய்யலாம்.
அதிகபட்ச பங்களிப்பு அவசியம்
மேலும் இந்தியாவில் நிறைய திறமையான இளம்வீரர்கள் வாய்ப்புக்காக வரிசை கட்டி நிற்கின்றனர். இதனால் ஒவ்வொரு வீரரும் போட்டியின்போது தங்களது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும். அப்போது தான் அணியில் நீடிக்க முடியும்.
அதன்படி நடைபெறும் ஐ.பி.எல். சகால் மற்றும் குல்தீப் என இருவருக்கும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொடராக உள்ளது. இதில் திறமையை நிரூபிக்காவிட்டால் நிச்சயமாக உலககோப்பைக்கன இந்திய அணியில் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
No comments