கதவால் கட்டையான நடுவிரல்; கவலையில்லாமல் கலக்கும் கம்மின்ஸ்
நடுவிரல் கட்டையாக இருப்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. |
சென்னை, ஏப்.,15-
மும்பை-கொல்கத்தா
மும்பை அணி 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி இறுதிகட்டத்தில் மோசமாக பேட் செய்தததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்தது.
கம்மின்ஸ் கலக்கல்
இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் களம் இறங்கி விளையாடினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை கேப்டன் ரோகித் (43) மற்றும் இஷான் கிஷான் (1) என முக்கிய விக்கெட்டுகளை கம்மின்ஸ் வீழ்த்தியதால் தான் மும்பை அணியின் ரன்வேகம் குறைந்ததற்கு காரணமாகும்.
கட்டையான நடுவிரல்
இந்நிலையில் கம்மின்ஸ் வலது கையில் உள்ள நடுவிரல் கட்டையாக இருப்பது பலருக்கும் தெரியாத விஷயம். இதற்கு பின் விபரீத சம்பவம் ஒன்று உள்ளது. இதுபற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது கம்மின்ஸ் வலது கையில் உள்ள நடுவிரல் இயல்பை விட ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கட்டையாக உள்ளது. இதனால் நடுவிரலானது, ஆள்காட்டி விரல் நீளத்தில் தான் உள்ளது.
இதுபற்றி கம்மின்ஸ் கூறுகையில், ‛‛எனக்கு 3 அல்லது 4 வயது இருக்கும். அப்போது கதவின் இடையில் என் விரல் இருந்தபோது சகோதரி வேகமாக கதவை சாத்தினார். விரலில் காயம் ஏற்பட்டது. இதுதான் விரல் கட்டையாக இருப்பதற்கான காரணம். இதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. மேலும் பந்துவீச அந்த விரல் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை. சொல்லப்போனால் ஆள்காட்டிவிரல், நடுவிரல் ஒரே அளவில் இருப்பது நன்றாக பந்துவீச சாதகமாக தான் உள்ளது. இப்போதும் கூட என் சகோதரி என்விரலை பார்க்கும்போது சிறுவயதில் நடந்த சம்பவத்தை நினைத்து கண்கலங்குவது உண்டு’’ என்றார்.
ரூ.15 கோடிக்கு தக்கவைப்பு
ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் பவுலராக வலம் வரும் கம்மின்ஸ் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.15 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். இந்த முறையும் ரூ.15 கோடிக்கு கொல்கத்தா அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments