சபாநாயகரான அப்பாவு; பின்னணி என்ன தெரியுமா
அப்பாவு |
சென்னை, மே11-
தமிழக சட்டசபையின் 16வது சபாநாயகராக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தி.மு.க. வெற்றி
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பதற்கான இடங்களை வென்று 10 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து மே 7ல் கவர்னர் மாளிகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். தி.மு.க.வை சேர்ந்த 33 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
தற்காலிக சபாநாயகர்
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வசதியாக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலாவது சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியது. தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று கொண்டனர்.
அப்பாவு தேர்வு
இதற்கிடையே சட்டசபை சபாநாயகர் தேர்தல் மே 12(அதாவது இன்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மதியம் 12 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அதன்படி சபாநாயகர் பதவிக்கு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் அப்பாவுவும், துணை சபாநாயகர் பொறுப்புக்கு பிச்சாண்டியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்பாவு, பிச்சாண்டி |
இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர்.
யார் இந்த அப்பாவு
சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பாவு அடிப்படையில் ஓர் ஆசிரியர். இதற்கு முன்பு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ராதாபுரம் தொகுதியில் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) சார்பிலும், 2001ல் சுயேச்சையாகவும், 2006ல் தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ல் நடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
2016ல் ராதாபுரம் தொகுதி தேர்தலில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையிடம் தோல்வியடைந்தார். தபால் வாக்கு எண்ணியதில் குளறுபடி நடந்ததாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும், அது அப்பாவுக்கு கைக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments