Header Ads

Header ADS

வார்னரை கழற்றி விட்ட ஐதராபாத்; புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்

புதுடெல்லி, மே.2-

நடப்பு ஐ.பி.எல்.லில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

திணறும் ஐதராபாத்

ஐ.பி.எல்.14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு என ஏதாவது ஒன்றில் சொதப்பி வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக மந்தமான பேட்டிங் தான் ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. வெற்றிக்காக கேப்டன் டேவிட் வார்னர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இதனால் புள்ளி பட்டியலில் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் ஐதராபாத் உள்ளது.

வில்லியம்சன் கேப்டன்

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டேவிட் வார்னருக்கு பதில் புதிய கேப்டனாக நியூசிலாந்தை சேர்ந்த கனே வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுபற்றி அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முடிவு எளிதாக எடுக்கவில்லை

ஐ.பி.எல்.லில் நாளை(அதாவது இன்று) நடக்கும் போட்டியில் இருந்து மீதமுள்ள சீசன் முழுவதும் கனே வில்லியம்சன் அணியின் கேப்டனாக செயல்படுவார். ராஜஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டியில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் மேற்கொள்ள இருக்கிறோம்.

சில ஆண்டுகளாக அணி நிர்வாகத்துடன் இணக்கமாகவும், கேப்டனாகவும் டேவிட் வார்னர் செயல்பட்ட நிலையில் இந்த முடிவை நாங்கள் எளிதாக எடுக்கவில்லை. வரும் நாட்களில் களத்திலும், களத்துக்கு வெளியேயும் டேவிட் வார்னர் அணிக்கு தேவையான உதவிகளை செய்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வில்லியம்சன் எப்படி

புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கனே வில்லியம்சன் கடந்த 2018 சீசனில் ஐதராபாத் அணியை வழிநடத்தினார். அந்த சீசனில் பைனலில் சென்னை அணியிடம் தோல்வியடைந்த ஐதராபாத் 2வது இடத்தை பிடித்தது.

இந்த சீசனில் வில்லியம்சன் 735 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 52.50 ஆகவும், ஸ்ட்ரைக்ரேட் 142.44 ஆகவும் இருந்தது.

யார் மாற்றம்

தற்போது அணி நிர்வாகம் தரப்பில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளதால் புதிதாக அணியில் ஜேசன் ேஹால்டர் இடம்பெற வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் அணியில் அங்கம் வகிக்கலாம். ஏனென்றால் பேர்ஸ்டடோ 6 போட்டிகளில் 218 ரன்களும், வார்னர் 6 போட்டிகளில் 193 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஆனால் வார்னர் சென்னைக்கு எதிரான போட்டியில்மந்தமாக பேட் செய்தார். 54 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதுதான் தோல்விக்கு காரணம் எனவும் அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி பார்த்தால் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டியில் வார்னருக்கு இடம் கிடைப்பது சந்தேகமாகலாம். ஒருவேளை வார்னர் நீக்கப்பட்டால் அது ஐதராபாத் அணிக்கு பின்னடைவாக அமையலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 2016ம் ஆண்டில் வார்னர் தலைமையில் ஐதராபாத் அணி ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.