முதல்வராகும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து; இணைந்து பணியாற்ற அழைப்பு
டெல்லி, மே. 3–
தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவிற்கு எதிராக இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் வாழ்த்து செய்தி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 10 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வர் இருக்கையை அலங்கரிக்க உள்ளார். இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார்.
அதில், ‘தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின். தேசத்தின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், கொரோனா பெருந்தொற்றை வென்றிடவும் இணைந்து பணியாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவு
மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கும், போற்றுதலுக்குரிய தமிழ் கலாசாரம் பேணவும் நடவடிக்கை எடுப்போம். பா.ஜ.,விற்கு உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
No comments