பிரபல காமெடி நடிகர் மரணம்; அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்
சென்னை, மே.11-
‛வைகைப்புயல்’ வடிவேலுவின் ‛கிணத்த காணோம்’ காமெடியில் போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா மரணமடைந்தார்.
மாரடைப்பால் மரணம்
தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நெல்லை சிவா. இவருக்கு வயது 69.
இந்நிலையில் ஊரடங்கால் சொந்தஊரில் இருந்த அவர் இன்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது இறுதிசடங்குகள் நாளை நடக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
500க்கும் அதிகமான படம்
இவர் தமிழ் திரையுலகத்துக்கு நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனின் ‛ஆண்பாவம்’ எனும் படம் மூலம் அறிமுகம் ஆனார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பணகுடி அருகே உள்ள வேப்பிலாங்குளத்தை சேர்ந்தவர். இதனால் அவரது பெயருக்கு முன்னாள் நெல்லை எனும் அடைமொழி ஒட்டிக்கொண்டது.
திரையுலகம் அதிர்ச்சி
தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை கொரோனா மற்றும் மாரடைப்பு காரணமாக பல நடிகர்கள் மரணமடைந்து வருகிறார்கள். சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விவேக், இயக்குனர் கே.வி.ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு மரணமடைந்தனர். தற்போது நெல்லை சிவா இறந்துள்ளதால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
No comments