சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர்; மாமனாரை பின்பற்றியவர் மாமியார்(போலீஸ்) வீடு சென்ற பரிதாபம்
கோலார், மே.19-
கர்நாடகத்தில் ஒரேமேடையில் சகோதரிகளை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாமனாரை பின்பற்றி மணம்முடித்த அவர் மாமியார் (போலீஸ் ஸ்டேஷன்) வீட்டுக்கு சென்றுள்ளார்.
நிச்சயத்தார்த்தம்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (வயது 30). இவருக்கும் உறவுக்கார பெண்ணான 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த சிறுமிக்கு 21 வயது நிரம்பிய அக்காள் இருக்கிறார். இவருக்கு பேச்சு குறைபாடு உள்ளது. இதனால் அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.
சகோதரிகளுடன் திருமணம்
இந்நிலையில் சிறுமி உமாபதியிடம் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது தன்னை திருமணம் செய்துகொள்ளும் அதேவேளையில் பேச்சு குறைபாடு உள்ள தனது அக்காவையும் மணம் முடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதற்கு உமாபதி ஒப்புக்கொண்டார். இதுபற்றி இருகுடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் இசைவு தெரிவிக்கப்பட்டது. அதன்படி உமாபதி சகோதரிகள் இருவரையும் குருதுமலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
புதுமாப்பிள்ளை கைது
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் விவாத பொருளானது. இதையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
உமாபதி |
18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக உமாபதியை கைது செய்தனர். மேலும் உமாபதியின் தந்தை சன்னராயப்பா, தாய் லட்சுமம்மா, சிறுமியின் தந்தை நாகராஜப்பா, தாய் ராணியம்மா உள்பட போலீசார் தேடிவருகிறார்கள்.
இருதிருமணம் செய்த மாமனார்
திருமணம் ஆன சகோதரிகளின் தந்தையான நாகராஜப்பாவும் இரு திருமணம் செய்தவர் தான். சகோதரிகளான ராணியம்மா, சுப்பம்மா(ஒருவருக்கு பேச்சு குறைபாடு உள்ளது) ஆகியோரை ஒரேமேடையில் திருமணம் செய்தார்.
நாகராஜப்பா போலீசில் சிக்காத நிலையில் அவரது மகள்களை ஒரேநேரத்தில் திருமணம் செய்த மருமகன் உமாபதியை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments