Header Ads

Header ADS

ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.70 லட்சம்; மாமரத்தை கண்காணிக்க காவலாளிகள்

 

ஜபால்பூர், ஜூன் 21-

உலகில் அதிக விலைக்கு விற்பனையாகும் மாம்பழமான ‛மியாசகி’ மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் விளைந்துள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

விவசாய தம்பதி

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூரை சேர்ந்தவர் சங்கல்ப். இவரது மனைவி ராணி. இருவரும் விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக பழவகை மரங்களை அதிகமாக வளர்த்து வருகிறார்கள்.

ஜபால்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்காவான் ரோட்டில் 1,100 மரங்கள் கொண்ட மிகப்பெரிய பழத்தோட்டத்தை உருவாக்கி பராமரித்து வருகின்றனர்.

ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்

இவர்களது தோட்டத்தில் சிவப்பு நிறத்திலான ஜப்பானின் ‛மியாசகி’ எனும் அதிசய மாம்பழம் விளைகிறது.  ஒரு கிலோ ‛மியாசகி’ மாம்பழத்தின் விலை சர்வதேச சந்தையில் ரூ.2.70 லட்சமாகும். ஒரு பழம் ரூ.21 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் உலகில் அதிக விலைக்கு விற்பனையாகும் மாம்பழம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

ஒரு பழம் சுமார் 350 கிராம் எடைக்கு அதிகமாக இருக்கும். பீட்டா கரோடின், பாலிக் ஆசிட் ஆகியவை உள்ளதால் கண்பார்வை குறைபாட்டை சரிசெய்யும் தன்மை கொண்டுள்ளது. ‛அன்ட்டிஆக்சிடன்ட்’ ஆகவும் செயல்படுகிறது. இந்த வகை மாமரம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக விளைச்சல் தரும்.

ரயில் சிநேககத்தில் அதிர்ஷ்டம்

இந்த அதிர்ஷ்ட மாமரம் குறித்து சங்கல்ப் கூறியதாவது:-

மரங்கள் வாங்க 4 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் சென்னை சென்றோம். எதேச்சையாக சகபயணியிடம் பேச்சு கொடுத்தேன். எங்களது விவசாயம் குறித்து அறிந்து கொண்ட அந்த பயணி மாங்கன்று கொடுத்தார். குழந்தைகளை போல் பாதுகாப்பாக வளர்க்கும்படி அறிவுறுத்தினார்.

அப்போது நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் இந்த மாங்கன்று பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நன்கு வளர்ந்து காய்கள் காய்த்தது. அது பிற மாங்காய்களில் இருந்து வேறுபட்டு இருந்தது. பச்சை நிறத்தில் இல்லாமல் ரூபி சிவப்பு நிறத்தில் இருந்தது. வித்தியாசமாக இருந்ததால் மறைந்த என் தாயின் நினைவாக டாமினி என பெயர் சூட்டினேன். இருப்பினும் மாங்காய் குறித்து ஆராய்ச்சி செய்தேன். அப்போது தான் அது ஜப்பானின் ‛மியாசகி’ வகையை சேர்ந்தது என்பதை அறிந்தேன்.

காவல்

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என்பதால் கடந்த ஆண்டு விளைந்த ‛மியாசாகி’ மாம்பழங்களை விவரம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் திருடி தின்று தித்திப்பு அடைந்தனர். இந்த ஆண்டு முதற்கட்டமாக 7 மாங்காய் காய்த்துள்ளது. இதை பாதுகாக்க முடிவு செய்து 9 நாய்களை காவலுக்கு வைத்துள்ளோம். 3 பேரை காவலாளிகளாக நியமித்து உள்ளோம். 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மும்பையை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவர் ஒரு மாம்பழத்தை ரூ.21 ஆயிரத்துக்கு வாங்க தயாராக இருக்கிறார். இருப்பினும் விற்பனை செய்ய நாங்கள் விரும்பவில்லை. மாறாக இந்த வகை மாமரத்தை அதிகமாக உருவாக்க விரும்புகிறோம்’’ என்றார்.

#newsthendral #worldcostilistmango #japanmiyazakimango #onekgmanors2.70laks #mangotree #securitypeppedupformangotree #miyazakimango #newsthendralbreakingnews 

No comments

Powered by Blogger.