இந்தியாவுக்கு பின்னடைவா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்; யுவராஜ் சிங் சொல்வதென்ன
புதுடெல்லி, ஜூன் 07-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்தை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு ஒரு விஷயம் பின்னடைவாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
பைனலில் இந்தியா-நியூசிலாந்து
இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடக்கிறது.
இதற்கு தயாராகும் வகையில் நியூசிலாந்து, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யுவராஜ் சிங் கருத்து
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு பின்னடைவு
இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து கூற வேண்டுமானால் இது 3 போட்டிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். முதல் போட்டியிலும் தோற்றாலும் கூட சுதாரித்து விளையாடினால் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெறமுடியும். ஆனால் அது அவ்வாறு அமையவில்லை.
தற்போதைய சூழலில் நியூசிலாந்து அணியை ஒப்பிடும்போது இந்திய அணிக்கு ஒரு விஷயம் பின்னடைவாக உள்ளது. அது என்னவென்றால் நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இது அவர்களுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். 8 முதல் 10 பயிற்சி சீசன் இருந்தாலும் கூட போட்டியின் மூலம் கிடைக்கும் பயிற்சிக்கு எதுவும் ஈடுகொடுக்க முடியாது.
அதிகப்படியான நம்பிக்கை
ஆனாலும் இந்திய அணி மீது எனக்கு மிகஅதிகப்படியான நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது. இந்தியாவில் பேட்டிங் பலமாக இருப்பதாக நம்புகிறேன். அதற்கு இணையாக பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments