தடுப்பூசிகளிடம் சிக்குமா டெல்டா பிளஸ் கொரோனா; தீவிர ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகள்
டில்லி, ஜூலை 25–
இந்தியாவில் புதிதாக பரவி வரும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பது பற்றி விரிவான ஆய்வில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்) நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
கொரோனா 2ம் அலை
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இவ்வைரஸ் பல நுாறு முறை தனது மரபணுவை மாற்றி இருப்பினும், இந்தியா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் தோன்றிய 4 வகை மரபணு மாற்ற வைரஸ்கள் தான் பெரும் அச்சுறுத்தலாக விளங்கின.
குறிப்பாக, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ் மிகவும் தீவிர தாக்குதலை தொடுத்தது. 80 நாடுகளில் இவ்வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் 2ம் அலை வருவதற்கு இவ்வைரஸ் முக்கிய பங்கு வகித்தது.
2ம் அலை படிப்படியாக குறைந்து வரும் சூழலில் 3ம் அலை குறித்த அச்சம் தொற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மீண்டும் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்திருப்பது தான்.
டெல்டா பிளஸ் கொரோனா
ஏற்கனவே இருக்கும் டெல்டா வகை கொரோனா வைரஸ், இப்போது டெல்டா பிளஸ் ஆக மரபணு மாறி இருக்கிறது. இவ்வைரஸ் இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மராட்டியம், தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தென்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நுரையீரல் செல்களில் துரிதமாக நுழைந்து தாக்குதலை ஏற்படுத்தக்கூடியது. மேலும் நமது எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் வேலையை பார்க்கும் என்றும் முதற்கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் இவ்வைரஸ்க்கு எதிராக வேலை செய்யுமா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது.
இது பற்றி விரிவான ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் களம் இறங்கியுள்ளனர்.
#newsthendral #deltaplus #newvariant #deltaplusinindia #delta #deltapluscorona #vaccinesvsdeltaplus #indianvariant #aboutdeltaplus #researchaboutdeltaplus #deltaplusinamerica #deltaplusintamilnadu
No comments