சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ரூ.20,700 கோடி முதலீடு; 13 ஆண்டில் வரலாறு காணாத உச்சம்
பெர்ன், ஜூன் 21-
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ரூ.20,700 கோடி முதலீடு செய்துள்ளனர். இது 13 ஆண்டில் இல்லாத வகையில் அதிகபட்ச தொகையாக அமைந்துள்ளது.
கருப்பு பணப்பெட்டி
சுவிஸ் வங்கியில் இந்தியாவின் பெரும் பணக்கார்கள், அரசியல்வாதிகள் தங்களது கருப்பு பணத்தை (கணக்கீல் காட்டாத பணம்) பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் சுவிஸ் வங்கி... என்றவுடன் மக்கள் மனதில் உதிப்பது கருப்பு பணத்தின் பாதுகாப்பு பெட்டி என்பது தான்.
இதற்கு சாதகமாக முதலீடு செய்துள்ளவர்களின் விபரங்களை வங்கி நிர்வாகம் முழுமையாக வெளியிடுவது இல்லை. இதனால் தான் என்னவோ கருப்பு பணம் அங்கு கட்டுக்கட்டாக குவிவதாக கூறப்படுகிறது.
ரூ.20,700 கோடி
இந்நிலையில் சுவிஸ் வங்கி 2021ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களின் முதலீடு குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரம் வருமாறு:–
சுவிஸ் வங்கியில் 2019 இறுதியில் இந்தியர்களின் முதலீடு ரூ.6,625 கோடியாக இருந்தது. தற்போது இது ரூ.20,700 கோடியாக (2,554.7 மில்லியன்) உயர்ந்துள்ளது. இதில் 4 ஆயிரம் கோடி (503.9 மில்லியன்) வாடிக்கையாளர்களின் நேரடி முதலீடாகும். பிற வங்கிகள் வழியாக கிடைத்த முதலீடாக ரூ.3,100 கோடி (383 மில்லியன்) உள்ளது. அறக்கட்டளைகள் பெயரில் 16.5 கோடியும்(2 மில்லியன்), பத்திரங்களாக 13,500 கோடியும் (1,664.8 மில்லியன்) முதலீடு செய்யப்பட்டுள்ளன.
13 ஆண்டுகளில் அதிகம்
இதன்மூலம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமாக முதலீடு செய்துள்ளது வெளிச்சமாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு குறைந்து வந்த நிலையில் தற்போது திடீரென அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மந்த கதியில் மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்பதாக கூறி சுவிஸ் வங்கி நிர்வாகத்திடம் இந்தியர்களின் விவரங்களை கேட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு முதல் பட்டியலை சுவிஸ் வங்கி வழங்கியது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மந்த கதியில் இருந்த மத்திய அரசு தற்போது விழித்துள்ளது. இதனால் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விபரங்களை வழங்கும்படி மீண்டும் கோரியுள்ளது.
இதுபற்றி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்பு பணம் என கூறப்படவில்லை. மாறாக இந்தியர்களின் முதலீடு என கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை இந்தியர்கள் அதிகமாக முதலீடு செய்து இருக்கலாம். இதுபற்றி விவரங்கறை வழங்கும்படி கேட்டுள்ளோம்’’ என கூறப்பட்டுள்ளது.
#swissbank #blackmoney #swissbankblackmoney #indianblackmoney #rs20700crore #indianmoneyrs20700crore #rs20700croredepositsinswiss #centralgovt #indiangovt
No comments