Header Ads

Header ADS

தமிழக டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமனம்

 
சைலேந்திரபாபு
சென்னை, ஜூன் 29-

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். 

நாளை ஓய்வு

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி நாளை ஓய்வு பெறுகிறார். இதனால்  தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.யாக யாரை நியமிக்கலாம் என தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை டி.ஜி.பி., பதவிக்காக மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

திரிபாதி
அதைத்தொடர்ந்து தமிழக தலைமைசெயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி ஆகியோர் டெல்லி சென்று ஆலோசனை நடத்தினர். இதில் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, சஞ்சய் ஆரோரா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.

சைலேந்திர பாபு நியமனம்

இந்நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரிவின் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டார்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியவர் தற்போது ரெயில்வே டி.ஜி.பி.,யாக இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த இவர் பி.எஸ்.சி., அக்ரி, சென்னை பல்கலைகழகத்தில் கிரிமினாலஜி துறையில் பி.எச்டி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். ஊக்கபேச்சாளராக இருக்கும் சைலேந்திரபாபு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றவராக உள்ளார்.

உயர் பதவிகளில் தமிழர்கள்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் ஐ.ஏ.எஸ். பொறுப்பில் உயர்பதவியான தலைமைசெயலாளராக இறையன்புவை(சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்) தி.மு.க., அரசு நியமித்தது.

தற்போது போலீஸ் துறை தலைவராக சைலேந்திர பாபுவை(கன்னியாகுமரி மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் மிகவும் உயர்வான பதவியில் இரண்டு தமிழர்கள் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.