Header Ads

Header ADS

கோடிகளில் புரளும் ‛பீடா’ வியாபாரிகள்; மிரண்டுபோன வருமான வரித்துறையினர்


கான்பூர், ஜூலை 23-

உத்தர பிரதேச மாநிலத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பானிபூரி, சமோசா, பீடா வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள், பிச்சைக்காரர்கள் என 256 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

256 பேர் கோடீஸ்வரர்கள்

படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள இந்திய நாட்டில் அவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வருவதில்லை. இப்படி இருக்கும் இந்த சூழலில் கொரோனா அரக்கனின் கொடூர ஆட்டத்தால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வேலையிழப்பு,  பசி, பட்டினி பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் டீ, சமோசா, பீடா, பழ வியாபாரிகள், பிச்சைக்காரர்கள், துப்புரவு பணியாளர் என மொத்தம் 256 பேர் கோடீஸ்வரர்களானது பற்றிய விஷயம் வெளிவந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

கான்பூர் கடைகள்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் கங்கை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நகர் கான்பூர். இங்கு மக்கள் மிக நெருக்கமாக வாழ்கிறார்கள். தொழில் வளர்ச்சி அடைந்த நகரமான இங்கு அடுக்கிவைத்த புத்தகமாய் வரிசை வரிசையாக சிறுகடைகள் அணிவகுக்கும். அதோடு, சாலையோரம் இருக்கும் சிறுஇடத்திலும் ரோட்டோர வியாபாரிகள் கடை விரித்துள்ளனர்.

இதில் அதிகமானோர் டீ, காபி, பஜ்ஜி, வடை, சமோசா, பிரட், பானிபூரி, மசால்பூரி,  பீடா, பழம், காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். பெரும்பாலான கடைகள் உரிமம் இன்றி செயல்படுவதோடு, அதன் உரிமையாளர்கள் உணவுத்தர சான்றிதழ்களும் பெற்றது கிடையாது.

வருமான வரி சோதனை

இந்த சட்டவிரோத வியாபாரிகள் தான் தற்போது அந்த நகரின் பேசும்பொருளாக(டாக் ஆப் தி டவுன்) மாறியுள்ளனர். அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகமே முடங்கி இருக்க, 2 வியாபாரிகள் மட்டும் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்தனர்.

இதற்கு எந்தவித வரியும் அவர்கள் கட்டவில்லை. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர். யார் அவர்கள் என அதிகாரிகள் ரகசிய விசாரணையை துவக்கினர். டேட்டாக்கள் சேமித்திருக்கும் நவீன மென்பொருள் கொண்டு தேடியபோது அங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள் எந்த வரியும் செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது.

சொத்துகள் குவிப்பு

இந்த விசாரணையின் இறுதியில் தான் அதிகாரிகள் மிரண்டு போயினர். அதாவது இரண்டு வியாபாரிகள் மட்டும் இல்லை. அங்கு துரித உணவு(பாஸ்ட் புட்), மெடிக்கல், பழ வியாபாரிகள், 2 துப்புரவு பணியாளர்கள், சில பிச்சைக்காரர்கள் என மொத்தம் 256 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரியவந்தது. அதாவது சொகுசு பங்களா, நிலம், கார்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அவர்கள் அதிபதி என்பது புலனானது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கான்பூரின் முக்கிய இடங்களான ஸ்வரூப் நகர், ஆர்யா நகர், ஹூலகஞ்ச், பிர்ஹானா ரோடு, கும்டி, பிராட் ஆகிய பகுதிகளில் பொறுத்தமட்டில் ரூ.375 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளனர். மேலும் புறநகர் பகுதிகளான பிதூர், நரமாவு, மந்தானா, கக்வான், பில்ஹார், சர்சால், பாருகாபாத் ஆகிய இடங்களில் 430 ஏக்கருக்கு நிலம் வாங்கியுள்ளனர். ஒரு சில வியாபாரிகள் தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்க பலரோ இன்னும் விபரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சொத்துகள் வாங்கியுள்ளனர்.

குபேரர் வாழ்க்கை

மேலும் வருமான வரி என ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. அத்துடன் கோடீஸ்வரர்கள் என்பதை வெளியுலகிற்கு காட்டாமல் கமுக்கமாக செய்யும் தொழிலே தொடர்ந்து குபேரர்களாக(கடவுள்களில் செல்வத்தின் அதிபதி) வாழ்க்கை நடத்தியுள்ளனர்.  கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்க இவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

1 comment:

Powered by Blogger.