Header Ads

Header ADS

‘ரீல் ஹீரோவாக இருக்காதீங்க விஜய். அரசுக்கு வரிகட்டுங்க’; காட்டம் காட்டிய ஐகோர்ட்

 


சென்னை, ஜூலை 13–

‘ரீல் ஹீரோவாக இருக்காதீங்க விஜய். அரசுக்கு வரிகட்டுங்க’ என தளபதி விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான அட்வைசும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

இங்கிலாந்து கார்

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகராக இருப்பவர் ‘இளையதளபதி’ விஜய். இவர் 2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ கார் வாங்கினார். இக்காருக்கு நுழைவு வரி செலுத்துவதை ரத்து செய்யக்கோரி விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை 2 வாரத்தில் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் எனக்கூறினார். அதுமட்டுமின்றி, விஜயின் செயலுக்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி பதிவு செய்தார்.

காரணம் என்ன

தனது கண்டனத்தில் அவர் கூறியது:

மனுவில் தனது பணி அல்லது வேலை குறித்து மனுதாரர் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்துள்ளார். நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான மனுதாரர் சரியான முறையிலும், வெளிப்படையாகவும் வரி செலுத்தி இருக்க வேண்டும். அரசுக்கு வரி செலுத்துவது என்பது கட்டாயமான ஒன்று. இது மிரட்டி பணம் பறிப்பு அல்லது நன்கொடை வகையில் சேராது.

‘ரீல்’ ஹீரோ

வரி என்பது ஏழை மக்களுக்காக பள்ளி, மருத்துவமனை, வீட்டு திட்டங்கள் மற்றும் ரெயில்வே, துறைமுகம் உள்பட பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்த உதவும். தமிழகத்தை பொறுத்தமட்டில் சினிமா நடிகர்கள் மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்களாக மாறியுள்ளனர். நடிகர்களை உண்மையான ஹீரோக்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் நடிகர்கள் ‘ரீல்’ ஹீரோக்களாக இருக்க கூடாது.

வரி ஏய்ப்பு என்பது இறையாண்மை, இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மனநிலையாகும். சமூகநீதிக்கான சாம்பியன்களாக நடிகர்கள் தங்களை பிரதிபலிக்கிறார்கள். அவர்களின் படங்கள் ஊழலுக்கு எதிரானதாக உள்ளது. இதனால் வரி ஏய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதிபதி அட்வைஸ்

நுழைவு வரி செலுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இருப்பினும் காருக்கு நுழைவு வரி உண்டா, செலுத்தப்பட்டதா என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை.

உலகில் விலையுயர்ந்த கார், சொத்து சேர்த்தல் ஆகியவை பரந்து விரிந்த நம் நாட்டில் நல்ல வாழ்க்கைக்கு எப்போதும் உதவியாக இருக்காது. நமது நாடு பல்வேறு கலாசாரம், சமூக மதிப்புகளை கொண்டது. புகழ்பெற்ற நபர்கள் அனைவரும் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்.

ஏழைகள் ரத்தம் சிந்தி உழைத்த பணம் தான் இந்த நிலைக்கு காரணம் என்பதையும், வானத்தில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும், என காட்டமாக அட்வைஸ் செய்துள்ளார்.

–––

டுவிட்டர் டிரண்டிங்

நீதிமன்ற உத்தரவு டிவி, இணையத்தில் வைரலானது. விஜய், அஜித் ரசிகர்கள் இடையே இணையதளத்தில் மோதலும் வெடித்தது. இதன் விளைவாக,  #வரிகட்டுங்க_விஜய் #கடனைஅடைங்க_அஜித் எனும் இரு ஹேஸ் டேக்கள் டுவிட்டரில் டிரண்டிங் ஆகின. 

---

அரசு வேலை தேடுபவருக்கு அரிய வாய்ப்பு இதோ:

 https://www.newsthendral.com/2021/07/indiannavyrecruitment2021.html

No comments

Powered by Blogger.