Header Ads

Header ADS

‘ஆன்டி செக்ஸ் பெட்’: ஒலிம்பிக்கில் வெடித்த சர்ச்சை


டோக்கியோ, ஜூலை 21-

டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக்கில் ‛ஆன்டி செக்ஸ் பெட்’ (Anti-sex bed)அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவலால் சர்ச்சை வெடித்துள்ளது. 

ஒலிம்பிக்கில் அட்டை கட்டில்கள்

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஜூலை 23ல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்களுக்கு வழங்கும் கட்டிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக வழங்கும் கட்டில் வழங்கப்படவில்லை. மாறாக, அட்டையை (CARD BOARD) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க வீரரின் பதிவு

இந்நிலையில் அட்டை கட்டில் விஷயத்தை அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் பால் செலிமோ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ‛‛டோக்கியோ ஒலிம்பிக்கில் அட்டையால் செய்யப்பட்ட கட்டில் பயன்படுத்தப்படுகிறது. போட்டிக்கு அப்பாற்பட்டு வீரர், வீராங்கனைகள் ஒன்றிணைவதை தடுப்பதே இதன் நோக்கமாம். இந்த கட்டில் ஒருவரின் உடல் எடையை மட்டுமே தாங்கும். என்னை பொறுத்தமட்டில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை’’ என  குறிப்பிட்டார்.

இதையடுத்து ஒலிம்பிக்கில் ‛Anti-sex bed’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் அட்டை கட்டிலின் உறுதித்தன்மை மீதும் சந்தேகம் எழுப்பப்பட்டது. இவரது இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையானதோடு பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

உடைந்து போகாது

இதற்கிடையே அட்டை கட்டிலில் நின்று அதில் பலமுறை குதித்து ஐரீஷ் ஜிம்னாஸ்ட் ரைஸ் மெக்லெனகன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‛அட்டை கட்டில் நல்ல தரமானதாக உள்ளது. இந்த கட்டில்கள் எளிதில் உடைந்து போகாது. உறுதித்தன்மை இல்லை என்பது பொய்யான செய்தி’ எனக்கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது வீடியோவுக்கு ஒலிம்பிக் கமிட்டி நன்றி தெரிவித்து உள்ளதோடு, கட்டிலின் உறுதி தன்மை மீது சந்தேகம் எழுப்பியவர்களுக்கு இது சரியான விடையாக இருக்கும் எனக்கூறியுள்ளது.

கொரோனாவை தடுக்க...

தற்போது கொரோனா பரவும் சூழலில் ஒலிம்பிக் போட்டியை பாதுகாப்பாக நடத்துவது மிகப்பெரும் சவால். வீரர், வீராங்கனைகள் சமூக இடைவெளியை பின்பற்றி கூட்டு சேராமல் இருப்பது மிக முக்கியான ஒன்று. இதை கருத்தில் கொண்டு தான் அட்டை கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீரர்களுக்கான அட்டை கட்டிலில் ஒருவர் மட்டும் படுக்கலாம். இது சுமார் 200 கிலோ எடையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் எவ்வித பயமும் இன்றி சமூக இடைவெளியுடன் கட்டிலில் தூங்கலாம்.

மறுசுழற்சி

ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் ‛ஏர்வேவ்’ என்ற நிறுவனம் 18 ஆயிரம் அட்டை கட்டில்களை தயார் செய்துள்ளது. ஒலிம்பிக் முடிந்த பிறகு இந்த கட்டில்களை மறுசுழற்சி செய்து மீண்டும் காகிதமாக பயன்படுத்த முடியும்.

மரங்களை வெட்டுவதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும், வீரர்களின் பாதுகாப்பு உகந்தபடியும் கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

ஒலிம்பிக் கமிட்டி கூறுவதென்ன

கொரோனா பரவும் சூழலில் வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு முக்கியமானது. மேலும் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக 1988 ம் ஆண்டு முதல் ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், ‛ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள் ஆணுறைகள் பயன்படுத்த கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. ஒலிம்பிக் போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் பத்திரமாக அவர்களின் நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது.  இருப்பினும் 1.60 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட உள்ளது. போட்டி சமயத்தில் வழங்காமல் சம்பந்தப்பட்ட வீரர்கள் தங்கள் நாட்டுக்கு செல்லும்போது வினியோகிக்கப்படும். இது அவர்களின் நாட்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வை மேற்கொள்ள வழிவகுக்கும் என ஒலிம்பிக் விழா கமிட்டி நம்புகிறது.’ என்றனர்.

மனச்சோர்வில் விடுபட

ஒலிம்பிக் போட்டியை பொறுத்தமட்டில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பல ஆயிரம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்பர். வீரர், வீராங்கனைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது. விளையாட்டு போட்டியில் புத்துணர்வோடு கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும்.

இதனால் பலர் மனச்சோர்வில் இருந்து காத்துக்கொள்ள உடலுறவில் ஈடுபடுவார்களாம். இதற்கு சான்றாக 2016ல் பிரேசில் ரியோ டீ ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கை கூறலாம். அப்போது  4.50 லட்சம் ஆணுறைகள் வினியோகிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலால் தற்போது அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிடியில்...

ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவது ஒலிம்பிக் நடக்குமா, இல்லையா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

Powered by Blogger.