இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி; டில்லி சிறுவன் உயிரிழந்த சோகம்
டில்லி, ஜூலை 21–
டில்லியில் 11 வயது சிறுவன் பறவை காய்ச்சலுக்கு பலியானான். நம் நாட்டில் இந்த ஆண்டு பறவை காய்ச்சலுக்கு நிகழ்ந்த முதல் பலி இது தான். அனைத்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் அறிகுறி
பிப்., மார்ச்., ஏப்., மாதங்களில் இந்தியாவின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தென்பட்டது. இமாச்சல், கேரளா, டில்லி, ஹரியான உட்பட 10 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல இடங்களில் பறவைகள் பலியாகின. கோழிகள் செத்து மடிந்தன. அதன் பிறகு எங்கும் பாதிப்பு தென்படவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீவிர காய்ச்சலுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதை உணர்ந்த டாக்டர்கள், தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் தொற்று உறுதியானது.
சிறுவன் பலி
தொடர்ந்து டாக்டர்கள் கவனிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்தான். பறவை காய்ச்சலுக்கு இந்த ஆண்டு நிகழ்ந்த முதல் பலி இதுவாகும். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தென்பட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களையும் சுகாதாரத்துறை உஷார்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
No comments