தமிழக பா.ஜ.க., தலைவராக அண்ணாமலை நியமனம்; யார் இவர் தெரியுமா... முழுவிபரம் உள்ளே
பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுடன் அண்ணாமலை |
சென்னை, ஜூலை 08-
தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மந்திரியான முருகன்
பா.ஜ.க.வின் தமிழக தலைவராக இருந்தவர் எல்.முருகன். சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி வேல்யாத்திரை நடத்தினார். மேலும் கட்சியை வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.
வேல்யாத்திரையில் முருகன் |
நடந்து முடிந்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் மட்டுமே வென்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட முருகன் தோல்வியடைந்தார்.
முருகன் |
இந்நிலையில் பிரதமர் மோடி மாற்றியமைத்த மத்திய மந்திரி சபையில் பால், கால்நடை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
அண்ணாமலை நியமனம்
இதனால் தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், துணை தலைவர் அண்ணாமலை உள்பட மேலும் சிலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தது.
அண்ணாமலை |
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை கர்நாடகத்தில் பணியாற்றி வந்தார். 2019ல் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தபோது பணியை ராஜினாமா செய்தார். அதன்பின் விவசாயத்தில் கவனம் செலுத்தினார்.
அண்ணாமலை |
அப்போது அவரை பற்றிய பல்வேறு வதந்திகள் பரவின. நடிகர் ரஜினி தொடங்கும் கட்சியில் அண்ணாமலை இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்தாண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழக பா.ஜ.க.வின் துணை தலைவராக செயல்பட்ட அண்ணாமலை தற்போது மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை பெற்றுள்ளார்.
கரூரை சேர்ந்தவர்
அண்ணாமலை, கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அங்குள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது பா.ஜ.க.வின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments