தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதியுங்க; கொரோனா பரவலால் மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி, ஆக.1-
கொரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதியுங்கள் என தமிழகம், கேரளா, மராட்டியம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சந்தர்ப்பத்தில் அலட்சியம் காட்டினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3ம் அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. இதன் ஒருபகுதியாக தான் சமீபத்தில் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. மேலும் ஆடிப்பெருக்கையொட்டி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக கேரளா, மராட்டியம், கர்நாடகம், ஒடிசா, அசாம், மிசோராம், மேகாலாயா, ஆந்திரா, மணிப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஆலோசனை
இந்த நிலையில் தமிழகம் உள்பட மேற்கூறிய 10 மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா பரவல், கட்டுப்படுத்த மேற்கொள்ளும் வழிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
அதன்பிறகு ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:
கடும் கட்டுப்பாடுகளை விதியுங்க
இந்த 10 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று உயர தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பரிசோதிக்கும் மாதிரிகளில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
இந்த மாவட்டங்களில் எக்காரணம் கொண்டும் மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது. இதில் குறைபாடு இருந்தால் வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தடுப்பூசி
மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகும் என கருதும் மாவட்டங்களில் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த 10 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 80 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு உதவி
இதுதவிர 10 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிளான்ட்கள் நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பி.எஸ்.ஏ., பிளான்ட் அமைக்க முன்வர வேண்டும். மத்திய அரசும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
46 மாவட்டங்களில் அதிகம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மருத்துவ கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவ் கூறியதாவது:
வரும் நாட்களில் மாநிலங்களில் ஒருவார பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து விடாமல் கட்டுப்படுத்துவதில் தன்னிறைவு அடைய வேண்டும். தற்போது 46 மாவட்டங்களில் பாதிப்பு 10 சதவீதத்துக்கு அதிகமாகவும், 53 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதத்துக்குள்ளும் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை முடுக்கிவிட வேண்டும். மாநிலங்களில் மாவட்ட வாரியாக செரோ சர்வே மேற்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றினைந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்க: கொரோனா எதிர்ப்பு திறனில் பின்தங்கிய தமிழகம்; செரோ முடிவில் அதிர்ச்சி தகவல்
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* இந்தியாவில் கொரோனாவால் 40 கோடி பேருக்கு ஆபத்து; செரோ ஆய்வில் திடுக் தகவல்
* டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தாக்குதல்; தமிழகத்துக்கு 2ம் இடம்
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
No comments