இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜூலை 21-
இந்தியாவில் 40 கோடி பேருக்கு கொரோனா எளிதாக பரவ வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.
‛செரோ சர்வே’
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) சார்பில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ‛செரோ சர்வே’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது 4 வது செரோ ஆய்வு நடந்து முடிந்துள்ளது.
இந்த ஆய்வில் இந்திய மக்களின் உடலில் கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பன உள்ளிட்ட சில அம்சங்களை பிரதானமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆரின் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவ் கூறியதாவது:
40 கோடி பேருக்கு ஆபத்து
ஜூன், ஜூலை மாதத்தில் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 36,227 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7252 பேர் சுகாதார பணியாளர்கள், 8,691 பேர் 6 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். முதன் முதலாக 18 வயது நிரம்பாதவர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுப்படி இந்தியாவில் 6 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பேர் அல்லது 67.6 சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் 40 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் அவர்கள் எளிதாக கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி வயது வாரியாக
மேலும் வயது வாரியாக பார்த்தால் 6–9 வயதில் உள்ளவர்களுக்கு 57.2 சதவீதம், 10–17 வயதினருக்கு 61.6 சதவீதம் இயல்பாகவே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 18–44 வயதினருக்கு 66.7 சதவீதம், 45–60 வயதினருக்கு 77.6 சதவீதம், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 76.7 சதவீதம் நோய் எதிர்ப்பு திறன் உள்ளது.
ஆண், பெண் என பிரித்து பார்க்கும்போது சராசரியாக ஆண்களுக்கு 65.8 சதவீதமும், பெண்களுக்கு 69.2 சதவீதமும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
தடுப்பூசி
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சுகாதார பணியாளர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவை எதிர்க்கும் சக்தியுடன் உள்ளனர். ஆனால் 10ல் ஒருவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களை பொறுத்தமட்டில் 62.2 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. 24.8 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 13 சதவீதம் பேர் இரண்டு கட்ட தடுப்பூசியும் செலுத்தி இருந்தனர்.
ஒரு டோஸ் செலுத்தி கொண்டோருக்கு 81 சதவீதமாகவும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு 89.8 சதவீதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 2020 மே-ஜூன் மாதம் முதல் முறையாக செரோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 0.7 சதவீத மக்கள் தான் கொரோனா நோய் எதிர்ப்பு திறனை பெற்றிருந்தனர்.
அதன்பின் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்வில் 7.1 சதவீதம் பேரும், 2020 டிசம்பர் 2021 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட செரோ ஆய்வில் 25 சதவீத மக்களும் தான் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தனர்.
தற்போது மக்கள் உடலில் கொரோனாவை எதிர்த்து போராடும் திறன் அதிகம் இருந்தாலும் கூட அலட்சியம் காட்டக்கூடாது. தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அலட்சியம் காட்டினால் ஆபத்து ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
* வீடியோ:
இச்செய்தியை வீடியோ வடிவில் பார்க்க, கிளிக் செய்யுங்கள்.
* பிற செய்திகள்:
* இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி; டில்லி சிறுவன் உயிரிழந்த சோகம்
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
No comments