Header Ads

Header ADS

புதிய தொற்று ‘மங்கிபாக்ஸ்’; கொரோனாவை தொடர்ந்து அடுத்த ஆப்பு

அமெரிக்காவும், அங்கு பரவும் ‘மங்கிபாக்ஸ்’ தொற்றின் அறிகுறியும்.


வாஷிங்டன், ஜூலை 17–

அமெரிக்காவில் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் என்னும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 18 ஆண்டுக்குப் பிறகு இப்பாதிப்பு தென்பட்டுள்ளது.

புதிய நோய் பரவல்

கொரோனா எனும் கொடிய நோய் உலக நாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் 2ம் அலை முடிந்தது. அதற்குள் மூன்றாம் அலைக்கான அஸ்திபாரத்தை கொரோனா வைரஸ் அமைத்துவிட்டது. அனைத்து நாடுகளும் இதை எதிர்கொள்ள தயாராகும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்த துயரத்தையே தாங்க முடியாத நிலையில், புதிது புதிதாக வேறு நோய்களும் பிறப்பெடுக்கின்றன. அந்த வரிசையில், வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது ‘மங்கிபாக்ஸ்’ என்னும் அரிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஒருவரை இந்நோயால் தாக்கியுள்ளது. அவர் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர். சமீபத்தில் நைஜீரியாவிற்கு சென்று திரும்பி இருக்கிறார். இச்சூழலில் தான் அவரை ‘மங்கிபாக்ஸ்’ தாக்கியுள்ளது.

சின்னம்மை குடும்பம்

இதுவும் ஒரு வைரஸ் வகை தான். நம் ஊரில் பாதிப்பை ஏற்படுத்தும் சின்னம்மை குடும்பத்தை சேர்ந்தது. ஆனால் அதை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நோய் தாக்கினால் தலைவலி, உடல் வலி, காய்ச்சல், சளி போன்ற வழக்கமான பாதிப்புகளுடன் வேறு சில மோசமான அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக உடல் முழுவதும் கொப்புளம் உண்டாகும்.

சளி துளி, பாதித்தவரின் ஆடை, அணிகலன்கள் மூலம் பரவும். கண், மூக்கு, வாய் வழியாக நம் உடலுக்குள் வைரஸ் நுழைந்துவிடும். இதை ஒரு கொடிய நோயாகவே உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது. எனினும் மிக அரிதாகவே இத்தொற்று பரவும்.

நைஜீரியாவில் அதிகம்

குரங்கு, எலி, அணில் போன்ற பிராணிகளிடம் இவ்வைரஸ் காணப்படுகிறது. சில நேரங்களில் அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றி விடுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தான் இதன் தாக்கம் அதிகம்.

சில வாரங்களுக்கு முன்பு இதே நைஜீரியாவிற்கு சென்று திரும்பிய பிரிட்டனை சேர்ந்த சிலரும் மங்கிபாக்ஸ் என்னும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுக்கு பின் பாதிப்பு

அமெரிக்காவை பொறுத்தவரை 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பாதிப்பு தென்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு மங்கிபாக்ஸ் பரவியது. அப்போது 43 அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இப்போது தான் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்களை அமெரிக்கா தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்துகிறது. குறிப்பாக அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள், அதன் பிறகு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தங்கள் வளையத்திற்கும் கொண்டு வருகிறது.

#monkeypox #america #newvirusinamerica #monkeypoxinamerica #whatismonkeypox

No comments

Powered by Blogger.