கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; மோடி எச்சரிக்கை
புதுடெல்லி/சென்னை, ஜூலை 17-
மோடி ஆலோசனை
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநில முதல்–அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடந்தது. அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:
3ம் அலைக்கு வழிவகுக்கும்
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலைக்கு முன்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்ததை இது நினைவுப்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் 80 சதவீதம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், அசாம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ளதால் அதை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும். இல்லையேல் கொரோனா மூன்றாம் அலை உருவாக அது வழிவகுக்கும். எனவே கொரோனா பரிசோதனை, பாதிப்பை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ரூ.23 ஆயிரம் கோடி
கொரோனாவை எதிர்த்து போரிட அவசர கால நிதியாக மத்திய அரசு ரூ.23 ஆயிரம் கோடி அறிவித்துள்ளது. இந்த நிதியை கொண்டு மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும். கிராமப்புறங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா 3ம் அலை சிறுவர்களை தாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைப்பதோடு, சிறுவர்களுக்கு எதிர்ப்பு திறனை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments