ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் நபர்; கும்பகர்ணனை மிஞ்சிய மளிகைக்கடைக்காரர்
நாகார், ஜூலை 18-
நவீன கும்பகர்ணன்
கும்பகர்ணன் என்றவுடன் நினைவுக்கு வருவது தூக்கம். ராமாயணத்தில் வரும் இராவணின் தம்பியான இவர் 6 மாதம் தூங்குவதையும், அதன்பின் கோரப்பசியால் அனைத்து உயிர்களையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பிரம்மனிடம் வரம் கோரியபோது இந்திராசனத்தை (இந்திரனின் இருக்கை) கேட்பதற்கு பதில் வாய்த்தவறி நித்ராசனத்தை (தூக்க படுக்கை) கேட்டதால் சிறந்த போர்வீரனான கும்பகர்ணன் தொடர்ச்சியாக தூங்கி பொழுதை கழிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.
தூக்கத்தில் 300 நாள்
ஆனால் இங்கே கும்பகர்ணனையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு ஆண்டின் 300 நாட்களை ஒருவர் தூங்கி கழிக்கிறார். குறிப்பாக மாதத்தில் 25 நாட்கள் தொடர்ச்சியாக தூங்குகிறார்.
இவரை அக்கிராம மக்கள் நவீன கால கும்பகர்ணன் என அழைக்கிறார்கள். யார் அவர்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக அப்படி தூங்குகிறார்? என்ற விபரத்தை இச்செய்தியில் பார்ப்போம்.
மளிகை கடைக்காரர்
ராஜஸ்தான் மாநிலம் நாகார் மாவட்டம் பத்வா கிராமத்தை சேர்ந்தவர் கன்வாரி தேவி. இவரது மகன் புர்க்காராம்(வயது 42). மனைவி லிச்மி தேவி. மளிகை கடை நடத்தும் புர்க்காராம் கடந்த 23 ஆண்டுகளாக விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது தொடர்ச்சியாக நீண்ட நேரம் தூங்குகிறார். துவக்கத்தில் ஒருநாளைக்கு 10 மணி நேரம், 20 மணிநேரம் தூங்கினார். இதையடுத்து அவருக்கு 2015ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தூக்கத்திலேயே உணவு
இந்த சிகிச்சையில் அவர் குணமடையவில்லை. மாறாக 5 முதல் 7 நாட்கள் வரை தொடர்ச்சியாக தூங்க துவங்கினார். தற்போது ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர்ந்து தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இதனால் ஆண்டின் 365 நாளில் 300 நாட்களை துாங்கியே கழிக்கிறார்.
தூங்கும் நாட்களில் தூக்கத்தில் இருந்து எழ நினைத்தாலும் அவரது உடல் ஒத்துழைப்பு அளிக்காது. இதனால் அவர் தொடர்ந்து தூங்கியபடியே இருப்பார். அவரை கண்விழிக்க செய்ய குடும்பத்தினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது. இதனால் அவர்கள் படாதபாடு படுகின்றனர். குறிப்பாக அவரது மனைவியும், தாயும் தூக்கத்தில் இருக்கும் புர்க்காராமுக்கு உணவு ஊட்டுவது உள்ளிட்ட பிற உதவிகள் அனைத்தையும் செய்கின்றனர்.
என்ன சொல்கிறார் புர்க்காராம்
இதுபற்றி புர்க்காராம் கூறுகையில், ‘‘நான் 25 நாட்கள் தூங்குவதால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே எனது கடையை திறப்பேன். அப்போது தினசரி பத்திரிகைகள் குவிந்து கிடக்கும். அதன் தேதிகளை கணக்கீட்டு எத்தனை நாட்கள் தூங்கினேன் என்பதை அறிந்து கொள்வேன்.
நோயை குணமாக்க மருந்து எடுத்து கொண்டாலும் இன்னும் சரியாகவில்லை. தூக்கம் வருவதற்கு முன்பு கடுமையான தலைவலியை உணர்வேன், அதிக சிரமத்தை அனுபவிக்கிறேன்’’ எனக்கூறினார்.
தாய்-மனைவி நம்பிக்கை
இதுகுறித்து அவரது தாய், மனைவி கூறுகையில், ‘‘புர்க்காராம் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தூங்குவதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
விவசாயம் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பத்தை நடத்துகிறோம். இருப்பினும் அவரது நோய் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்’’ என்றனர்.
நோயின் பெயர் என்ன
புர்க்காராம் நோய் குறித்து மருத்துவத்துறை தரப்பில் ‛‛இந்நோயின் பெயர் ஆக்சிஸ் ைஹபர்சோமியா. டி.என்.எப்., ஆல்பா எனும் மூளை புரோட்டீன் ஏற்ற இறக்கம் காரணமாக இந்நோய் உருவாகும். குணப்படுத்துவது கடினம் எனினும் இது மிகச்சிலருக்கு தான் தென்படும்’’ என்கின்றனர்.
No comments