ரிஷப்பண்ட்டை தாக்கியது டெல்டா கொரோனா; இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பங்கேற்பாரா
லண்டன், ஜூலை 15–
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிஷப் பண்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன் போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் மண்ணைக் கவ்வியது.
இத்தோல்வி முகத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வேண்டி இருப்பதால், இந்திய அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்பவில்லை. இங்கிலாந்திலேயே முகாமிட்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடர் ஆக.,4ல் துவங்குகிறது.
பண்டுக்கு டெல்டா
இத்தொடருக்கு முன்னோட்டமாக ஜூலை 20ல் துவங்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் கவுண்டி சாம்பியன்ஷிப் லெவன் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக வீரர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறார். அவரை டெல்டா வகை வைரஸ் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
கொரேனாா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பயிற்சி ஆட்டம் நடக்கும் இடத்திற்கு ரிஷப் பண்ட் செல்லவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.
தொற்று எப்படி வந்தது
சமீபத்தில் வெம்பிள்டன்னில் நடந்த கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரிஷப் பண்ட் சென்றிருந்தார். ஜெர்மனியுடன் இங்கிலாந்து மோதிய ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். இந்தநிலையில் தான் பண்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-----
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள்:
No comments