நோய் எதிர்ப்பு சக்தியில் பின்தங்கிய தமிழகம்; கொரோனா ‛செரோ சர்வே’ முடிவில் ‛திடுக்’ தகவல்
புதுடெல்லி, ஜூலை 29-
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியில் தமிழகம் பின்தங்கி 10ம் இடத்தில் உள்ளது என ‛செரோ சர்வே’ முடிவில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
செரோ 4வது ஆய்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் ‛செரோ சர்வே’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. 3வது ஆய்வில் இந்தியாவில் 67.6 சதவீத மக்கள் கொரோனா நோய் எதிர்ப்பு திறனுடன் இருப்பதாகவும், கொரோனா எளிதாக தாக்கும் நிலையில் 40 கோடி பேர் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 4வது ‛செரோ சர்வே’ மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களில் எவ்வளவு மக்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளனர் என்பதை கண்டறியும் நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. அதன் விபரம் வருமாறு:
10ம் இடத்தில் தமிழகம்
கொரோனா நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தமட்டில் மத்திய பிரதேசம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 79 சதவீதம் பேர் கொரோனா நோய் எதிர்ப்பு திறனை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்து 2வது இடத்தில் ராஜஸ்தான் (76.2%), 3ம் இடத்தில் பீகார் (75.9%) உள்ளது.
4ம் இடத்தில் குஜராத் (75.3%), 5ம் இடத்தில் சத்தீஸ்கர் (74.6%), 6ம் இடத்தில் உத்தரகாண்ட் (73.1%), 7 ம் இடத்தில் உத்தரபிரதேசம் (71%), 8 ம் இடத்தில் ஆந்திரா (70.2%), 9ம் இடத்தில் கர்நாடகா (69.8), 10ம் இடத்தில் தமிழ்நாடு (69.2) உள்ளது.
கடைசியில் கேரளா
கடைசி மூன்று இடங்கள் அதாவது 58.0 சதவீத கொரோனா நோய் எதிர்ப்பு திறனுடன் 19வது இடத்தில் மராட்டியம், 50.3 சதவீதத்துடன் 20வது இடத்தில் அசாம் உள்ளது. 21வது இடத்தில்(கடைசி) கேரளா உள்ளது. இங்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக (44%) இருப்பது தெரியவந்துள்ளது.
கடைசி மூன்று இடங்களில் உள்ள மாநிலங்களில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கொரோனா 3வது அலையில் 3 மாநிலங்களும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக...
மேலும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை கூடுதல் முதன்மை செயலாளர், முதன்மை செயலாளர், செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ‛செரோ சர்வே’ மேற்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
* இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை; மருத்துவ ஆராய்ச்சியாளர் புதுகுண்டு
* கொரோனா 3ம் அலைக்கு வழிவகுக்கும் தமிழகம்; பிரதமர் மோடி எச்சரிக்கை
* உயிரணுவை சேகரித்து குழந்தை பெறலாம்; கொரோனா பாதித்த நபரின் மனைவிக்கு அனுமதி
* கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
* இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி; டில்லி சிறுவன் உயிரிழந்த சோகம்
No comments