Header Ads

Header ADS

+2 ரிசல்ட் ஜூலை 19 வெளியீடு; எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்

 

சென்னை, ஜூலை 17-

தமிழகத்தில் பிளஸ்2 ரிசல்ட் ஜூலை 19(நாளை) வெளியாகிறது. ரிசல்ட்டை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனாவால் தேர்வு இல்லை

கொரோனா பரவலால் 2020-2021 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மேல்படிப்பை தொடர 12ம் வகுப்பு மதிப்பெண் மிக முக்கியமானது.

இதனால் மாணவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மதிப்பெண் கணக்கீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 10, 11ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண், 12ம் வகுப்பு செய்முறை தேர்வின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் மதிப்பீடு செய்யவும் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஜூலை 19ல் ரிசல்ட்

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்(ரிசல்ட்) ஜூலை 19ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2020–2021 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12ம் வகுப்பு) பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் 19.07.2021(நாளை) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

கைபேசியில் முடிவுகள்

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண், பிறந்த தேதியினை பதிவிட்டு மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.