ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளுதூக்குதலில் கிடைத்தது
டோக்கியோ, ஜூலை 24-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மிராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் பதக்கப்பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது.
வெள்ளிப்பதக்கம்
ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று பெண்களுக்கான 49 கிலோ எடை பிரிவிவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் மிராபாய் சானு கலந்து கொண்டார்.
‛ஸ்னாட்ச்’ பிரிவில் 87 கிலோ பளு தூக்கிய மிராபாய் சானு, ‛கிளீன் அன்ட் ஜெர்க்’ பிரிவில் 115 கிலோ பளு தூக்கி (மொத்தம் 202 கிலோ) அசத்தினார். இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்த போட்டியின் முடிவில் சீனாவை சேர்ந்த ஹவ் சிஹூ (94+116 கிலோ, மொத்தம் 210) பளு தூக்கி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்தோனேசியாவின் ஐசா விண்டி கேன்டிகா (194 கிலோ) தூக்கி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
3வது இடத்தில் இந்தியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்த மிராபாய் சானு மணிப்பூரை சேர்ந்தவர். இவரது பதக்கம் மூலம் மதியம் 12.15 மணி நிலவரப்படி டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஒரு பதக்கத்துடன் இந்தியா 3வது இடத்தில் இருந்தது.
No comments