‘ஆடியில் புதுமண தம்பதியை பிரிப்பது ஏன்’: முன்னோர் சொன்ன ஆன்மிக, அறிவியல் காரணம் இதுதான்
தென்காசி, ஜூலை 17-
‘ஆடியில் புதுமண தம்பதிகள் கூடக்கூடாது’ என்னும் நம் முன்னோரின் வழக்கத்திற்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா. அது பற்றிய முழுவிபரத்தை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஆடியின் சிறப்பு
ஆடி...! இது தமிழில் 4வது மாதம். பிற மாதங்களை போல் ஆடிக்கும் தனிச்சிறப்பு பல உண்டு. இம்மாதத்தில் தான் துணிக்கடைகள், இதர நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி சலுகைகளை வழங்கும். இதனால் துணிகள், வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் அள்ளி வரலாம். ஒரு கொண்டாட்டமான மாதமும் இதுவே.
விவசாயிகளும் ஆடி மாதத்தை எதிர்பார்த்து விதைப்பு பணியை தொடங்குவர். ‛ஆடிப்பட்டம் தேடி விதை’ என முன்னோர்கள் சொல்லி வைத்தது தான் இதற்கு காரணம். அதாவது ஆடி மாதம் விவசாயத்துக்கு ஏற்ற மாதம். இம்மாதத்தில் விதைப்பு பணிக்கு ஏற்ப மழையும், காற்றும் இருக்கும். இந்த மாதத்தில் விதைப்பு செய்தால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உண்டு. இது விவசாயிகளுக்கு சந்தோஷம் தரும் செய்தி.
புதுமண தம்பதி பிரிப்பு
என்ன தான் சிறுவர் முதல் பெரியோர் வரை இம்மாதத்தை கொண்டாடினாலும் புதுமணத்தம்பதிகள் மட்டும் கவலையில் மூழ்கிவிடுவர். ஏனென்றால் புதிதாக இல்வாழ்வில் இணைந்த தம்பதிகளுக்கு முதன்முறை வரும் ஆடி மாதம் முழுவதும் பிரிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது பல ஆண்டு காலம் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வந்தாலும் அதற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. இந்த பிரிப்பு முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தாலும் இதற்கு பின்னணியில் அறிவியல் காரணங்களும் உள்ளன.
சித்திரையில் குழந்தை வாய்ப்பு
முதல் ஆடியில் கணவரின் வீட்டில் இருக்கும் பெண்ணை பிரித்து தாய் வீட்டுக்கு அழைத்து செல்வர். காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கை கூடாது. மீறி கூடினால் தம்பதிக்கு சித்திரையில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சித்திரையில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் குழந்தையையும், குழந்தையின் தாயையும் பாதிக்கலாம். இப்படியொரு அறிவியல் காரணத்தை புரிந்து வைத்திருந்ததால் தான் நம் முன்னோர் இதை வழக்கப்படுத்தினர்.
அதுமட்டுமல்ல, சித்திரையில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு நல்லதாக அமையாது எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் முறையான பரிகாரங்கள் செய்தால் தோஷங்களை நீக்கி யோகங்கள் பெற வாய்ப்பு உண்டு என ஆன்மிகவாதிகள் நம்புகின்றனர்.
மனசஞ்சலம் கூடாது
இன்னொரு காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது இந்த மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, கருட பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், தீமிதி, கூழ் வார்த்தல் என அடுத்தடுத்து திருவிழாக்கள் வரும்.
இத்தகைய சூழலில் புதுமண தம்பதியினரின் மனம் சஞ்சலப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவர்களை பிரித்து வைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆடி மாதம் விவசாயிகளின் விதைப்பு காலம் என்பதால், விவசாய பணியில் கவனம் செலுத்தும் நோக்கிலும் இந்த தம்பதி பிரிப்பு படலம் அரங்கேறுகிறதாம்.
சிறு இடைவெளி உறவு வலுப்படுத்தும்
புதிதாக உருவான எந்தவொரு உறவிலும் ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். சிறுகால இடைவெளி இருவர் இடையேயான நினைவை அதிகப்படுத்தி உறவை வலுப்படுத்தும். இதற்கு ஆடி மாதத்தை பயன்படுத்துகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதோடு ஆடியில் விவசாய பணிக்கு அதிக செலவு இருக்கும் நிலையில் திருமணம் உள்ளிட்ட பிற சுபகாரியங்களை மேற்கொள்வதையும் தவிர்ப்பார்கள். இதனால் தான் ஆடியில் முகூர்த்தங்கள் இருந்தாலும் கூட பெரும்பாலும் திருமணங்கள் நடத்துவது இல்லை.
மூடநம்பிக்கையா
இவ்வாறு புதுமண தம்பதியின் ஆடி பிரிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் கூட தற்போதைய இளம் தலைமுறையினர் அதை மூடநம்பிக்கை எனும் ஒற்றை சொல்லில் கூறிவிடுகிறார்கள்.
முதல் ஆடியில் பிரித்து வைத்தால் போதுமா... அடுத்த ஆடியில்... என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் முன்னோரின் இப்பழக்கத்தை அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பார்த்தால் நியாயமான காரணம் புரியும் என பெரியவர்கள் சொல்கிறார்கள்.
👌😁
ReplyDelete