மனைவியை விவாகரத்து செய்த பில்கேட்ஸ்; காரணம் தெரியுமா
நியூயார்க், ஆக.3-
உலக கோடீஸ்வரர்களில் 4ம் இடம் வகிக்கும் பில்கேட்ஸ் மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார். 27 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்ததால் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளனர். இவர்களின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
காதல் திருமணம்
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் பில்கேட்ஸ் (வயது 63). உலக கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் இருந்த இவர் தற்போது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வந்தர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 124 மில்லியன் டாலராக உள்ளது.
பில்கேட்சின் மனைவி பெயர் மெலிண்டா. 2 பேரும் காதல் திருமணம் செய்தனர். அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய மெலிண்டாவை, பில்கேட்ஸ் 1994 ஜனவரி 1ல் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு ஜெனிபர், ரோரி, போபி என 3 பிள்ளைகள் உள்ளனர்.
பிரிய முடிவு
‘‘நீண்ட யோசனைக்கு பின் நாங்கள் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களின் 27 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் 3 பிள்ளைகளை வளர்த்துள்ளோம். நல்ல அறக்கட்டளையை கட்டமைத்துள்ளோம். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள ஏழை குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு உதவுகிறோம்.
இந்த விஷயத்தில் இருவரும் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுவோம். ஆனால் நல்ல தம்பதியாக வாழ்க்கையை முன்னெடுப்போம் என்பதில் நம்பிக்கையில்லை. புதிய வாழ்வை முன்னெடுக்கும் எங்களுக்கு தனி வாழ்வுக்கான இடம் கொடுத்து மதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டு இருந்தனர்.
விவாகரத்து உறுதி
இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வாஷிங்டனில் உள்ள கிங் கவுன்டி கோர்ட்டில் மே 3ல் மெலிண்டா விவாகரத்து மனு செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் 90 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது. இந்த காலக்கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து 2 பேரும் பிரிந்து செல்லலாம் எனக்கூறி கோர்ட் நேற்று முன்தினம் விவாகரத்து வழங்கியது.
முன்னதாக கோர்ட்டில் பில்கேட்ஸ் தம்பதி இணைந்து சம்பாதித்த சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் செய்தது பற்றிய விவரங்கள் கூறப்பட்டன. அதன்படி சொத்துகளை பிரித்து கொள்ள உத்தரவிட்ட கோர்ட் விவாகரத்து வேளையில் வழங்க வேண்டிய நிவாரணம் தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு எனவும் கூறவில்லை.
காரணம் என்ன
பில்கேட்ஸ்–மெலிண்டா தம்பதி விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது நண்பரான பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டின் என்பவருடன் பில்கேட்ஸ்சுக்கு நட்பு தொடர்கிறது. இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஜெப்ரி எப்ஸ்டின் கூறியதை தொடர்ந்து பில்கேட்ஸ் இல்லற வாழ்க்கையை முறித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் பில்கேட்ஸ்க்கு தொடர்பு இருப்பதும், இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் இதுவும் கணவன்–மனைவி இடையே பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுதவிர சொத்துகள் அதிகமாகி உள்ளதால் அதை பிரித்து கொள்வதன் மூலம் வரி கட்டுவது குறைந்துவிடும் என நினைத்து இருவரும் பரஸ்பரம் பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகழ்பெற்ற அறக்கட்டளை
பில்கேட்ஸ்–மெலிண்டா தம்பதி பில் அண்ட் மெலிண்டா என்ற அறக்கட்டளையை நடத்துகின்றனர். லாப நோக்கில் இயங்காமல் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு சேவையை ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. 1.75 பில்லியன் டாலர் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர போலியோ, மலேரியா, ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மேம்பாட்டுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த அறக்கட்டளை நடத்துகிறது. தடுப்பூசி தயாரிப்புக்கும் உதவி வருகிறது. இந்த அறக்கட்டளையின் உலகின் புகழ்பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளையாக உள்ளது. விவாகரத்து பெற்றாலும் கூட இந்த அறக்கட்டளையை இருவரும் சேர்ந்து முன்னெடுப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை புரிதல் ஏற்படாவிட்டால் 2 ஆண்டுகளுக்கு பிறகு அதில் இருந்து மெலிண்டா விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம் கிடைக்கும். ரிசர்வ் வங்கி புதுஉத்தரவு
வேறு செய்திகள்
* பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது
No comments