சிறுவனை கொன்ற ஆன்லைன் கேம்! செல்போன் விளையாட்டில் மூழ்கி கிடப்போரே விழித்திடுங்கள்
சாகர்பூர், ஆக., 1–
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி ரூ.40 ஆயிரத்தை இழந்த 13 வயது சிறுவன் மன உளைச்சல் தாங்காமல் உயிரை மாய்த்தான். நீங்களும் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி கிடப்பவர் என்றால், இது உங்களுக்கான எச்சரிக்கை மணி.
செல்போனில் மூழ்கிய சிறுவர்
கொரோனா ஊரடங்கு, ஆன்லைன் வகுப்பு போன்ற காரணங்களால் செல்போன், கணினியை பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அத்தியாவசிய தேவை தவிர்த்து சாட்டிங் மற்றும் வீடியோ கேம்களில் மூழ்கி தேவையின்றி நீண்ட நேரத்தை இவற்றில் செலவிடுகின்றனர். ஏற்கனவே செல்போன கேம்களில் மூழ்கி நுாற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து உயிரை மாய்த்து இருக்கின்றனர். ஆனாலும் விழிப்புணர்வு வரவில்லை.
இந்த வரிசையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு தற்கொலை சம்பவமும் இணைந்துள்ளது. அம்மாநிலத்தின் சாகர்பூர் மாவட்டத்தில் சாந்திநகர் என்னும் பகுதி உள்ளது. இங்குள்ள 13 வயது சிறுவன் ஒருவன் ‘free fire’ என்னும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருந்தான். ஆன்லைன் வகுப்புப்போக எஞ்சிய நேரத்தில் இவ்விளையாட்டில் தான் மூழ்கி இருந்தான்.
கண்டித்த தாய்
சம்பவத்தன்று வேலைக்கு சென்றிருந்த அவனது தாயின் செல்போனுக்கு ஒரு குருஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1500 எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆன்லைன் கேம் விளையாடியபோது தனது மகன் இத்தொகையை இழந்தது தெரிந்தது.
உடனே தனது மகனை அழைத்து கண்டித்தார். மனம் உடைந்த சிறுவன் தனது அறைக்கு சென்று மின்விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான்.
உருக்கமான கடிதம்
அதற்கு முன்பு அவன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், ‘ஆன்லைன் கேம்விளையாடி இதுவரை ரூ.40 ஆயிரத்தை இழந்துவிட்டேன். மனஉளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்கிறேன். அழாதீர்கள் அம்மா...’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆன்லைன் கேம் தனது மகனின் உயிரை பறித்துவிட்ட துக்கம் தாங்க முடியாமல் பெற்றோர் முடங்கிவிட்டனர். நீங்கள் ஆன்லைன் கேமில் மூழ்கி கிடப்பவர் என்றால், அதில் இருந்து மீண்டு நிஜ உலகத்திற்கு வாருங்கள். வாழ்க்கை பெரிது.
No comments