ரோல்ஸ் ராய் காருக்கு வரிவிலக்கு; தனுசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்
சென்னை, ஆக.5-
வரி விலக்கு கோரிய தனுஷ்
நடிகர் தனுஷ் பிரிட்டனில் இருந்து ‘ரோல்ஸ் ராய் கோஸ்ட்’ கார் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு ரூ.60.66 லட்சம் வரி செலுத்த வணிக வரித்துறை கூறியது.
இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் தனுஷ் சார்பில் 2015ல் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு வரி செலுத்துவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பாதி தொகையை செலுத்தி காரை பதிவு செய்ய வேண்டும் எனக்கூறியது.
கோர்ட் உத்தரவு
இதையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் ரூ.30.33 லட்சம் செலுத்தப்பட்டதாக கோர்ட்டில் கூறப்பட்டது. முறையான விதிகளை பின்பற்றி காரை பதிவு செய்ய 2016ல் கோர்ட் அறிவுறுத்தியது.
இதற்கிடையே ‛வெளிநாடுகளில் இருக்கும் இறக்குமதி செய்யும் கார்களுக்கு முறையாக வரி செலுத்த வேண்டும்’ என டெல்லி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீதிபதி கண்டனம்
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த தனுசின் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணை நடத்தினார்.
அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஏற்கனவே காருக்கு விதிக்கப்பட்ட வரியில் பாதி செலுத்தப்பட்டு விட்டது. மீதி தொகையையும் செலுத்த தயாராக உள்ளோம். இதனால் வழக்கை முடித்து வைக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
எத்தனை கார் வாங்கினாலும் வரி செலுத்துங்கள்
உங்களது நோக்கம் உண்மையானதாக இருந்தால் முன்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதே வரி செலுத்துவதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது ஐகோர்ட் வழக்கை பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. சொகுசு கார் செல்லும் சாலையானது வரி செலுத்துபவர்களின் பணத்தில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது.
பால் வியாபாரி, தினக்கூலி ஊழியர்கள் கூட தாங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு வரி செலுத்துகிறார்கள். சோப்புக்கும் வரி கட்டப்படுகிறது. ஆனால் சொகுசு கார் வாங்குபவர்கள் வரி விலக்கு கோருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் அதற்கு உரிய வரியை முறையாக செலுத்துங்கள்.
நேரமில்லாத சூழல்
கோர்ட்டை நாடுவது உங்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகாவது மனுவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். முக்கிய பிரச்னைகள் தொடர்பான வழக்கை விசாரிக்க நேரமில்லாத சூழல் ஐகோர்ட்டில் உள்ளது.
இதற்கிடையே விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கோபமூட்டும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரித்தொகை விபரத்தை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
48 மணிநேரத்தில்...
மேலும் மனுதாரர் செய்யும் தொழில், பணி குறித்து மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை.
இதுதொடர்பான மனுவையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த 48 மணிநேரத்தில் காருக்கான மீதமுள்ள 50 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்றார்.
விஜய்க்கு கண்டனம்
முன்னதாக ஜூலை மாதம் ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரிய நடிகர் விஜய் மனு சென்னை ஐகோர்ட் விசாரித்தது. அப்போதும் ‛‛வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனக்கூறிய கோர்ட் ரியல் ஹூரோவாக இருங்க... ரீல் ஹூரோவாக இருக்க வேண்டாம்’’ என விஜயை நீதிபதி கண்டித்தது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யுங்க: ‛‛ரீல் ஹூரோவாக இருக்காதீங்க விஜய்... ரியல் ஹூரோவா இருக்காதீங்க...’’ நடிகர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்
No comments