ஆசிய நாடுகளில் டெல்டா தாண்டவம்; இந்தியாவுக்கு மீண்டும் ஆப்பு...!
–சிறப்பு நிருபர்–
கொரோனா... கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் அதிகம் உச்சரித்த பெயர். சீனாவில் கிளம்பிய இந்த வைரஸ் பரவல் உலகத்தையே முடக்கி போட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும் கூட வைரஸ் தொடர்ந்து உருமாறி தாக்குதல் தொடுக்கிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
மீண்டும் எகிறும் பாதிப்பு
இந்நிலையில் ஆசியாவின் சில நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மூன்றாம் அலை ஆட்டத்தை துவங்கிவிட்டது. மரபணு மாறிய வைரஸ்களில் கொடிதாக கருதப்படும் டெல்டா வகை தான் பெரும்பாலும் தாக்குதல் தொடுக்கிறது.
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனா, தாய்லாந்து, மலேசியாவில் தொடர்ச்சியாக பாதிப்பு அதிகரிக்கிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த சீனாவில் தலைநகர் பெய்ஜிங் உள்பட 15 நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தாய்லாந்து, மலேசியா
தாய்லாந்தை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 18,912 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 178 பேர் இறந்ததால் மொத்த பலி 4,857 ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 17,786 பேர் பாதிக்கப்பட்டனர். அந்நாட்டில் ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச பாதிப்பு இது தான். அதாவது, கொரோனா பேரிடர் துவங்கியதில் இருந்து இதுவரையிலான காலத்தில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டதில்லை.
இதுவரை 11 லட்சத்து 13 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 165 பேர் இறந்ததால் மொத்த பலி 9024 ஆக உயர்ந்துள்ளது.
‘ஒலிம்பிக்’ நாட்டிலும் ஏற்றம்
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஜப்பானிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. முதல் முறையாக ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அங்குள்ள சிபா, கானாக்வா, சாய்டாமா, ஒசக்கா ஆகிய மாநிலங்களில் கொரோனா அவரச நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டோக்கியோ, ஒக்னாவா பகுதியிலும் ஆகஸ்ட் இறுதியில் இந்த பிரகடனம் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் மொத்தம் 48 நாடுகள் உள்ளன. மீண்டும் ஒவ்வொரு நாடாக கொரோனா பாதிப்பு பட்டியலில் இணையத் துவங்கியுள்ளன. விரைவில் இந்தியாவும் இணையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
No comments