Header Ads

Header ADS

நம் தேசியக்கொடியின் வரலாறு தெரியுமா; தயாரிப்பு முறை அறிய இதை படியுங்க...


உப்பள்ளி, ஆக.,15-

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடும் நிலையில் உலகம் முழுதும் பறக்கும் தேசியக்கொடியின் பிறப்பிடம், தயாரிப்பு முறை பற்றிய முழுவிபரத்தை  இச்செய்தியின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

சுதந்திர தினம் 

ஆகஸ்ட் 15... அகிம்சை வழியில் ஆங்கிலேயர்களிடம் போராடி இந்தியா சுதந்திரம் அடைந்த தினம். இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்க ஏராளமானவர்கள் செய்த உயிர் தியாகத்தை இந்நாளில் நினைவு கூறுவது நமது கடமையாகும்.
அதோடு, சுதந்திர தினத்தில் ஏற்றும் நமது தேசியக்கொடியின் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் முக்கியமான விஷயம். இந்தியாவில் ஒரேஒரு இடத்தில் தான் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. அதுபற்றிய விபரம் வருமாறு:

தேசியக்கொடி வடிவமைப்பு

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அவர்கள் வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கொடிகளை தயாரித்து பயன்படுத்தினர். இந்த கொடிகள் குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே மக்கள் மனதில் நின்றன.

அதன்பிறகு தான் இந்திய தேசியக்கொடி மூவர்ணத்தில் வடிவமைக்கப்பட்டது.  மேலிருந்து கீழ் காவி, வெள்ளை(நடுவில் அசோக சக்கரம்), பச்சை வண்ணத்தில் உள்ள தற்போதைய தேசியக்கொடியை பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அதாவது 1947 ஜூலை 22 முதல் இந்த கொடி இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்தியாவின் அடையாளமாக இந்த தேசியக்கொடி உள்ளது.

கர்நாடகத்தில் மட்டுமே தயாரிப்பு


ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிலையில் ஜனாதிபதி, பிரதமர், உயர் பொறுப்புகளில் உள்ளவர்களின் கார்களிலும் தேசியக்கொடி உள்ளன. இந்த தேசியக்கொடிகள் அனைத்தும் இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே பென்னிக்கேரியில் உள்ள கர்நாடக கைத்தறி மற்றும் கிராமோதயா சம்யுக்தா சங்கத்த்தில் தான் தேசியக்கொடி உற்பத்தியாகிறது. இந்த சங்கமானது கைத்தறி ஆடைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் கூட்டு முயற்சியால் 1957 ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
தொடக்கத்தில் கைத்தறி ஆடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2005ம் ஆண்டு முதல் தேசியக்கொடிகள் தயாரிக்கும் அனுமதி சங்கத்துக்கு வழங்கப்பட்டது. இந்திய கைத்தறி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற இச்சங்கம் இந்திய தரஆய்வு மையம் வழிக்காட்டுதல் மற்றும் குறியீட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசியக்கொடியை தயாரிக்கிறது. அதன்படி 2006ம் ஆண்டில் இருந்து அரசு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் இந்தியா உள்பட உலகம் முழுதும் பறக்கும் தேசியக்கொடிகள் இங்கிருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன.

இரு கட்டங்களாக பணி

தேசியக்கொடி தயாரிப்பானது சங்கம் சார்பில் கர்நாடகத்தின் பாகல்கோட்டை மற்றும் தார்வார் மாவட்டங்களில் இருகட்டங்களாக நடக்கிறது.
பாகல்காட்டை மாவட்டம் துளசிக்கேரி, ஜாலிகால் கிராமங்களில் தேசியக்கொடிக்கான துணிகள் கைத்தறி மூலம் நெசவு செய்யப்படுகின்றன. ராட்டையை பயன்படுத்தி பருத்தியில் இருந்து நூல் உற்பத்தி செய்து துணிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த துணிகள் 2 மணி நேரத்தில் 100 கி.மீட்டர் தூரத்தை வாகனங்களில் கடந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளி பென்னிகேரியில் உள்ள கர்நாடக கைத்தறி மற்றும் கிராமோதயா சம்யுக்தா சங்கத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கு தான் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது.

சாயம் ஏற்றி இறுதி வடிவம்

முதலில் துணிகள் தூய்மைப்படுத்தப்பட்டு மிளிர செய்யப்படுகின்றன.  வெள்ளை நிறத்தில் மாற்றமடைந்த துணிகளில் காவி, பச்சை வண்ண சாயம் ஏற்றப்படுகிறது. வெள்ளை துணியின் மத்தியில் சக்கர அச்சு மூலம் அசோக சக்கரம் அச்சிடப்பட்டு உலர வைக்கப்படுகிறது.
அதன்பின் காவி, வெள்ளை, பச்சை வண்ண துணிகள் சரியான அளவில் வெட்டி மூன்றையும் ஒன்றாக இணைக்கும் வகையில் தையல் எந்திரம் மூலம் தைத்து தேசியக்கொடிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு முழுமை பெறும் தேசியக்கொடி ‛அயர்ன்’ செய்யப்பட்டு முறைப்படி மடித்து வைக்கப்படுகிறது. இங்கு 150 X 100 மி.மீட்டர் என்ற அளவில் சிறிய தேசியக்கொடியும் 21 X 14 அடி என்ற அளவில் மிகப்பெரிய தேசியக்கொடியும் தயாரிக்கப்படுகிறது.

90 சதவீதம் பெண்கள்

இதுபற்றி அங்கு பணியாற்றும் பெண் மேலாளர்கள்,ஊழியர்கள் கூறியதாவது: ‛‛தேசியக்கொடி தயாரிப்பில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் பணிக்கு வருவது இல்லை. வந்தாலும் அவர்கள் சில நாட்களில் பணியை விட்டு நின்று விடுவார்கள். காரணம் என்னவென்றால் இந்த பணிக்கு அதிக பொறுமை வேண்டும்.
தேசியக்கொடியின் நிறம், தையல்களில் சிறுபிழைகள் இருந்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். இதற்கு அபராதம் அல்லது சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு இருந்தாலும் கூட நாங்கள் தொடர்ந்து நாட்டு மீதான பற்றால் தேசியக்கொடி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கான கூலி குறைவு என்ற போதிலும் கூட தேசியம் விட்டு தேசம் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடியை பார்க்கும்போது இது நாம் தயாரித்தது என்ற பெருமையே மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

9 அளவீடுகளில் தயாரிப்பு

இதுபற்றி கர்நாடக கைத்தறி மற்றும் கிராமோதயா சம்யுக்தா சங்க செயலாளர் சிவானந்தா கூறுகையில், ‛‛இந்தியாவிலேயே தேசியக்கொடி தயாரிக்கும் அங்கீகாரத்தை இச்சங்கம் மட்டுமே பெற்றுள்ளது. இங்கு 9 வகையான அளவீடுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகிறது’’ என்றார்.


No comments

Powered by Blogger.